தொழிலாளி குத்திக்கொலை

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-29 22:15 GMT

பந்தலூர்

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

குடும்ப தகராறு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பனஞ்சிறா கொற்றமங்களம் ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் குமாரன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாரதா (55). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவர்கள் திருமணமாகி கேரளாவில் வசிக்கிறார்கள். இதனால் கணவன், மனைவி தனியாக வசித்து வந்தனர்.குமாரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இதற்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. குமாரன் தனது மனைவியை துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாரதா கோபித்துக்கொண்டு கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்த்தான்பத்தேரி அருகே புத்தன்குன்னு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

கத்தியால் குத்தினார்

இந்தநிலையில் நேற்று முன்தினம் சாரதா கணவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். பின்னர் ஓணம் பண்டிகையையொட்டி இறைச்சி உணவு சமைப்பதற்காக, இரவில் கணவன், மனைவி இருவரும் கோழியை உரித்து உள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த குமாரன், தாய் வீட்டிற்கு சென்று விட்டு எதற்காக திரும்பி வந்தாய் என்று சாரதாவிடம் கேட்டதோடு, தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது குமாரன் சாரதாவை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாரதா அருகில் இருந்த கத்தியை எடுத்து குமாரனின் காலில் குத்தினார். இருப்பினும், மதுபோதையில் இருந்த குமாரன் உறங்கி உள்ளார். ஆனால், கத்தி குத்தில் அவரது இடது காலில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறியது. இந்தநிலையில் நேற்று காலை சாரதா எழுந்து பார்த்த போது, கணவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மனைவி கைது

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் எருமாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் அமுதா, திருஞானசம்பந்தம், சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குமாரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சாரதாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்