வந்தே பாரத் ரெயில் மூலம் 6 மணி நேரத்தில் கோவையில் இருந்து சென்னை செல்லலாம்

வந்தே பாரத் ரெயில் மூலம் 6 மணி நேரத்தில் கோவையில் இருந்து சென்னை செல்லலாம். இந்த சேவை 8-ந் தேதி தொடங்குகிறது.;

Update:2023-03-24 00:15 IST

கோவை

வந்தே பாரத் ரெயில் மூலம் 6 மணி நேரத்தில் கோவையில் இருந்து சென்னை செல்லலாம். இந்த சேவை 8-ந் தேதி தொடங்குகிறது.

சென்னை ரெயில்கள்

கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் இண்டர்சிட்டி, கோவை, சதாப்தி, நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவில் சென்னைக்கு ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் இருந்து கோவை வழியாகவும் சென்னைக்கு ரெயில்கள் இயக்கப் பட்டு வருகின்றன. அந்த வகையில் தினமும் 15 ரெயில்கள் கோவையில் இருந்து சென்னைக்கு சென்று வருகிறது.

வந்தே பாரத் ரெயில்

இந்த நிலையில் வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவையை ரெயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இந்த வந்தே பாரத் ரெயில் சேவையை கோவை வழித்தடத்திலும் தொடங்க வேண் டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி கோவை- சென்னை வழித்தடத்தில் வருகிற 8-ந்தேதி வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதை தமிழகம் வரும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

6 மணி நேரம்

கோவை- சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் சென்றடை யும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

வந்தே பாரத் ரெயில் கோவையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்றடையும். சென்னையில் இருந்து பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோவை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்