நெல்லையில் ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கிறிஸ்தவர்கள்

மாம்பழ சங்க பண்டிகையையொட்டி நெல்லையில் ஏழைகளுக்கு உணவுப்பொருட்களை கிறிஸ்தவர்கள் வழங்கினார்கள்.

Update: 2021-07-14 22:12 GMT
நெல்லை, ஜூலை.15-
மாம்பழ சங்க பண்டிகையையொட்டி நெல்லையில் ஏழைகளுக்கு உணவு பொருட்களை கிறிஸ்தவர்கள் வழங்கினார்கள். 
மாம்பழ சங்க பண்டிகை
நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் மாம்பழ சங்க பண்டிகை மற்றும் 241-வது ஸ்தோத்திர பண்டிகை பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆயத்த ஆராதனை, சிறப்பு ஸ்தோத்திர ஆராதனையுடன் தொடங்கியது. மிஷினரிகள் கல்லறைகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாள் மாம்பழ சங்க பண்டிகை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. பிரதான ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.
இந்த ஆராதனைக்கு பிரதமர் பேராயரின் ஆணையாளர் பேராயர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். உபதலைவர் சுவாமிதாஸ், குருத்துவ செயலாளர் பாஸ்கர் கனகராஜ், லே செயலாளர் ஜெயசிங், பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொல்லம் கொட்டாரக்கரை திருமண்டல பேராயர் ஓமன் ஜார்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேவசெய்தி அளித்தார். இதில் ஞானதிரவியம் எம்.பி., கே.பி.கே.செல்வராஜ் மற்றும் குருவானவர்கள், திருச்சபை மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
ஏழைகளுக்கு உணவு பொருட்கள்
மேலும் நூற்றாண்டு மண்டபம் பகுதியில் இருந்த ஏழைகளுக்கு அரிசி, உணவு பொருட்கள் மற்றும் காணிக்கைகளை கிறிஸ்தவர்கள் வழங்கினார்கள்.
இன்று (வியாழக்கிழமை) பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயத்தில் 241-வது வருடாந்திர ஸ்தோத்திர பண்டிகை ஆராதனை நடைபெறுகிறது. இதில் திருச்சபை மக்கள் திரளாக பங்கேற்று தங்களது ஒருநாள் சம்பளத்தை காணிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர். 

மேலும் செய்திகள்