சிரியாவில் சுரங்கப்பாதையில் வெடிகுண்டு தாக்குதல் 9 பேர் சாவு

சிரியாவில் 6 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வந்தது.

Update: 2017-01-18 22:15 GMT
பெய்ரூட்,

சிரியாவில் 6 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வந்தது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இருப்பினும் ஆங்காங்கே மோதல்கள் நடக்கின்றன.

இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு வெளியே நேற்று முன்தினம் ஒரு சுரங்கப்பாதையில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி ஒரு ராணுவ அதிகாரியும், 8 வீரர்களும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

கொல்லப்பட்ட ராணுவ அதிகாரி, ஜெனரல் அந்தஸ்து வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குண்டுவெடிப்புக்கு பின்னர் 15 பேரை காணவில்லை. பலர் படுகாயமும் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த குண்டுவெடிப்பு குறித்த தகவல்களை சிரியா அரசின் ஊடகங்கள் வெளியிடவில்லை. மேலும், எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

அதே நேரத்தில் தேசிய அளவில் போர் நிறுத்தம் அமலில் இருந்து வந்தாலும், இந்த தாக்குதல் நடைபெற்ற பகுதியில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும் செய்திகள்