ஹவுதி தாக்குதல்.. பற்றி எரியும் பிரிட்டன் எண்ணெய் கப்பல்: உதவி செய்ய விரைந்த இந்திய கடற்படை

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

Update: 2024-01-27 13:00 GMT

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லக் கூடிய வணிகக் கப்பல்களை குறிவைத்து ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் இன்று ஏடன் வளைகுடா பகுதியில் பிரிட்டனைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டாவை தாக்கி உள்ளனர். ஏவுகணை மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எண்ணெய் கப்பலில் தீப்பற்றியது.

எண்ணெய் கப்பலில் இருந்தவர்கள், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புகொண்டு உதவி கேட்டனர். இதையடுத்து ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்பு குழுவினர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். எண்ணெய்க் கப்பலில் 22 இந்தியர்கள் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என 23 பேர் உள்ளனர்.

அரபிக் கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய கடற்படை தனது போர்க் கப்பல்களை தயார்நிலையில் நிறுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது.

வணிகக் கப்பல்களை பாதுகாப்பதிலும், கடலில் மனிதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இந்திய கடற்படை உறுதியுடன் இருப்பதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்