ஆயுதக் குழுவினர் இடைவிடாத தாக்குதல்.. ஹைதியில் பசி-பட்டினியால் வாடும் மக்கள்

பள்ளிகளுக்கு தீவைத்தல், மருத்துவமனை மற்றும் மருந்தகங்களை சூறையாடுதல் என ஆயுதக் குழுவினரின் வெறியாட்டம் நீடித்தது.

Update: 2024-03-27 06:42 GMT

கரீபிய நாடான ஹைதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுவினரின் வன்முறை தாக்குதல்களால் பல ஆண்டுகளாக மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். 2021-ல் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டபின் வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை கடந்த பிப்ரவரி 7-ம் தேதிக்குள் நடத்தியிருக்கவேண்டும். ஆனால், அரசாங்கம் தேர்தலை நடத்த தவறியதால் சமூக பதற்றம் அதிகரித்துள்ளது.

பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி மாத இறுதியில் இருந்து தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பொது இடங்கள் மீது ஆயுதக்குழுக்கள் தாக்குதல்களை நடத்துகின்றன. குறிப்பாக, காவல் நிலையங்கள், போலீஸ் அகாடமி மற்றும் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. நாட்டின் பிரதான சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய இரண்டு சிறைச்சாலைகளில் இருந்து 4 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகரின் 80 சதவீத பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஆயுதக் குழுவினரை எதிர்கொள்ள முடியாமல் காவல்துறை ஸ்தம்பித்துள்ளது. இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) புதிய தாக்குதலை தொடங்கிய ஆயுதக் குழுவினர், நேற்று வரை (செவ்வாய்க்கிழமை) தாக்குதலில் ஈடுபட்டனர். பள்ளிகளுக்கு தீவைத்தல், மருத்துவமனை மற்றும் மருந்தகங்களை சூறையாடுதல் என அவர்களின் வெறியாட்டம் நீடித்தது.

ஆயுதக்குழுவினரின் வன்முறை காரணமாக உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பசி பட்டினியால் வாடத் தொடங்கி உள்ளனர்.

'ஹைதியில் தொடரும் வன்முறை மற்றும் ஸ்திரத்தன்மையின்மை ஆகியவை வன்முறையினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அப்பாற்பட்ட பயங்கர விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஏராளமான குழந்தைகளின் உயிரைப் பறிக்கக்கூடிய குழந்தை ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நெருக்கடியை உருவாக்குகிறது' என யுனிசெப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் தெரிவித்தார்.

ஹைதியில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 19 சதவீதம் அதிகரித்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. சுமார் 1.64 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளதாகவும், இந்த ஊட்டச்சத்து நெருக்கடி முற்றிலும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் யுனிசெப் குறிப்பிட்டுள்ளது. தலைநகரில் நடந்த வன்முறையால் சுமார் 58,000 குழந்தைகளுக்கு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விநியோகம் தடைபட்டுள்ளது.

இதற்கிடையே, தொடர் வன்முறை மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு பணிந்த பிரதமர் ஏரியல் ஹென்றி, நாட்டை வழிநடத்த இடைக்கால கவுன்சில் உருவாக்கப்பட்டவுடன் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்