வல்லரசு கனவுடன் இந்தியா.. கையேந்தும் நிலையில் நாம்- பாக்.எதிர்க்கட்சித் தலைவர் வேதனை

பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான மவுலானா பஸ்லுர் ரகுமானும் இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-30 10:13 GMT

இஸ்லமபாத்

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்),பிபிபி கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே, கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கும் பெரும் தலைவலியாக பொருளாதார பிரச்சினை உள்ளது.

பாகிஸ்தானின் நிலையும், இந்தியா நிலையையும் விவரித்து அந்நாட்டு மக்கள் பேசும் வீடியோக்கள் அண்மைக்காலமாக வெளியாகி வருகின்றன. அதிலும் இந்தியாவை வெளிப்படையாக பாராட்டி அந்நாட்டு மக்கள் பேசி வருவதையும் பார்க்க முடிகிறது. சில அரசியல் தலைவர்களும் இந்தியாவை பாராட்டி வருகிறார்கள். முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் தேர்தல் பிரசாரத்தின் போது இந்தியாவை பாராட்டி பேசினார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான மவுலானா பஸ்லுர் ரஹ்மானும் இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நாடாளுமன்றத்தில்  பேசியதாவது:- 1947 - ஆண்டு ஆகஸ்ட் மாதம்  இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றன. இன்று இந்தியா சர்வதேச அளவில் வல்லரசு நாடாக மாற கனவு காண்கிறது. ஆனால், நாம் திவால் நிலையில் இருந்து தப்பிக்க கையேந்தி கொண்டு இருக்கிறோம்.

இங்கே தோற்றவர்கள் திருப்தியடையவில்லை, வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. தற்போதைய ஆளும் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ஒழுக்கத்தை மறந்து நாட்டின் ஜனநாயக அமைப்பை விற்பனை செய்து வருகின்றனர். சுவர்களுக்குப் பின்னால் நம்மைக் கட்டுப்படுத்தும் சக்திகள் உள்ளன, நாம் வெறும் பொம்மைகளாக இருக்கும்போது அவர்கள் முடிவுகளை எடுக்கிறார்கள்.பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி பதவி விலகி, பிடிஐ கட்சியை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்