இந்தியாவின் எதிர்ப்புக்கு பணிந்தது இலங்கை- சீன கப்பல் வருகை ஒத்திவைப்பு

சீனாவின் 'யுவான் வாங்-5' என்ற உளவு கப்பல், ஹம்பன்தொட்டா துறைமுகத்துக்கு வருவதாக தகவல் வெளியானது.

Update: 2022-08-06 14:13 GMT

கொழும்பு,

இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பந்தோட்டா ஆழ்கடல் துறைமுகம், சீனாவிடம் கடன் பெற்று மேம்படுத்தப்பட்டது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால், அத்துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு அளித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை அப்போது பதிவு செய்து இருந்தது.

இதற்கிடையே, சீனாவின் 'யுவான் வாங்-5' என்ற உளவு கப்பல், ஹம்பன்தொட்டா துறைமுகத்துக்கு வருவதாக தகவல் வெளியானது. செயற்கை கோள் கண்காணிப்பு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வசதிகள் ஆகியவற்றை கொண்டதாக கூறப்படும் சீனாவின் அதி நவீன உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்கு வருவது பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது. மேலும், இந்தியா தனது கவலையை இலங்கையிடம் பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், உளவு கப்பல் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவுக்கு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் சீன தூதரகத்திடம் அளித்த கோரிக்கையில், திட்டமிட்டபடி கப்பல் வருகையை முன்னெடுத்து செல்ல வேண்டாம் எனவும், கப்பல் வருகையை நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், சீனாவின் உளவு கப்பல் தற்போதைக்கு இலங்கையில் நிறுத்தப்படாது என்று தெரிகிறது. முன்னதாக நேற்று, சீனாவின் உளவு கப்பல் பயணம் நிறுத்தப்படும் என்று இலங்கை அரசியல் கட்சிகள் மத்தியில் பேசிய அந்நாட்டு அதிபர் ரனில் விக்ரம்சிங்கே உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்