சிங்க குட்டியை தட்டி கொடுத்த டிப்-டாப் ஆசாமிக்கு நேர்ந்த கதி... வைரலாகும் வீடியோ

சிங்க குட்டியை தட்டி கொடுக்க முயன்ற நபருக்கு, வனவிலங்குகள் விளையாட்டு பொம்மைகள் அல்ல என சமூக ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-10-11 07:59 GMT



நியூயார்க்,


வீட்டில் செல்ல பிராணிகளாக நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை பழக்கப்படுத்தி வளர்ப்பது வழக்கம். ஆனால், வேட்டையாடி வாழ கூடிய வனவிலங்குகள் இதற்கு நேர்மாறானவை. அவற்றை வளர்ப்பதற்கு பல நாடுகளில் சட்ட அனுமதி இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அவை ஆபத்து விளைவிக்க கூடியவை என்பதும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.

சமீபத்தில், டிப்-டாப் ஆடையணிந்த நபர் ஒருவர், சிங்க குட்டிகளுடன் இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது.

அதில், கார் ஒன்றின் மீது 2 சிங்க குட்டிகள் அமர வைக்கப்பட்டு உள்ளன. அந்த நபர் வெறுங்கைகளுடன் நாய் குட்டியை தடவி கொடுப்பது போன்று, ஒரு சிங்க குட்டியை தடவி கொடுக்கிறார். அதற்கு அருகே இருந்த மற்றொரு சிங்க குட்டி, தன்னை படம் எடுக்கும் நபரை நோக்கி அச்சத்துடன் சீறுகிறது.

இந்த சூழலில், அருகில் இருந்த டிப்-டாப் நபர் அதனையும் தொட்டு பழக்கப்படுத்த முயற்சிக்கிறார். இதில், அந்த சிங்க குட்டி ஆவேசமுடன் அவரது கையை கடிக்க பாய்கிறது. எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இதில், அந்த நபர் சற்று பின்வாங்கி செல்கிறார். பின்னர், மீண்டும் அவர் முன்னே வந்து சிங்க குட்டியில் ஒன்றை பிடிக்க முயற்சிப்பதற்குள், அது காரின் மேற்கூரை மீது தவ்வி செல்கிறது.

செல்ல பிராணிகளாக வளர்க்கும் விலங்குகளின் வகைப்பாட்டில் சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகள் பொதுவாக வருவதில்லை. அவற்றின் இயற்கை வாழிடம் வன பகுதிகளாகவே உள்ளன. அதனை வளர்ப்பதோ அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபடுவதோ ஆபத்து விளைவிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வீடியோ அமைந்துள்ளது. இதனை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். 2.74 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். பலரும், இதன் ஆபத்து பற்றி எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர்.

இது முட்டாள்தனம் என ஒருவரும், மிக ஆபத்து நிறைந்தது. இதனை முயற்சிக்க வேண்டாம் என மற்றொருவரும், விலங்குகளை துன்புறுத்துதல் என மூன்றாம் நபரும் பகிர்ந்து உள்ளனர். புலி, சிங்கம், சிறுத்தைப்புலி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட அனைத்து விலங்குகளும் வனவிலங்குகள். செல்ல பிராணிகள் அல்ல என மற்றொரு நபர் தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்