அரச குடும்பத்தினர் இறுதி மரியாதைக்காக எடின்பர்க் கொண்டு செல்லப்படும் இங்கிலாந்து ராணியின் உடல்

ராணியின் உடல் பால்மோரல் மாளிகையில் இருந்து ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பர்க் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

Update: 2022-09-11 09:55 GMT

Image Courtesy : AFP

லண்டன்,

இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8-ந்தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 96. அவரது மறைவுக்கு இங்கிலாந்து மக்களும், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவை தொடர்ந்து, இளவரசராக இருந்த 3-ம் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியுள்ளார்.

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ந் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்ர் வளாகத்தில் நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. முன்னதாக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக, இங்கிலாந்து ராணியின் அதிகாரப்பூர்வ இருப்பிடமான எடின்பர்க்கில் உள்ள 'ஹோலிரூட்ஹவுஸ்' மாளிகையில் நாளை மதியம் வரை வைக்கப்பட உள்ளது.

இதற்காக தற்போது ராணியின் உடல் பால்மோரல் மாளிகையில் இருந்து ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பர்க் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்த வருகை தர உள்ளனர். தற்போதைய வேல்ஸ் இளவரசரும், இளவரசியுமான வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதி, இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கெல் ஆகியோரும் விண்ட்சர் அரண்மனைக்கு வருகை தந்துள்ளனர்.

அரச குடும்பத்தினர் மரியாதை செலுத்திய பிறகு, இங்கிலாந்து மக்கள் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக, ராணி எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் 4 நாட்கள் வைக்கப்பட உள்ளது. இதையடுத்து செப்டம்பர் 19-ந்தேதி நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் இங்கிலாந்தின் முக்கிய பிரமுகர்களும், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்