ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் பொதுமக்கள் குவிந்தனர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்

ஸ்ரீரங்கம், தை அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2017-01-27 22:19 GMT
தை அமாவாசை

மறைந்த முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். பெரும்பாலும் பொதுமக்கள் நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதன்படி தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் நேற்று காலை பொதுமக்கள் குவிந்தனர். அதிகாலை முதலே பொதுமக்கள் வரத்தொடங்கினர். புரோகிதர்களும் படித்துறை வளாகத்தில் வரிசையாக அமர்ந்திருந்தனர். மேலும் அகண்ட காவிரி தற்போது நீரோடை போல ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் புனித நீராட வசதியாக மாநகராட்சி சார்பில் தொட்டிகளும், குழாய்களும் அமைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்கள் அவதி

புரோகிதர்களிடம் பொதுமக்கள் தங்களது முன்னோர்களின் பெயர், நட்சத்திரம் ஆகியவற்றை கூறி, தர்ப் பணத்திற்கான பொருட்களை கொடுத்தனர். புரோகிதர்கள் மந்திரங்களை ஓதி, சிலவற்றை கூற வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். பொதுமக்கள் களும் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் பிண்டங்களை தண்ணீரில் விட்டு புனித நீராடினர். தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகை தந்ததால் அம்மா மண்டபம் படித்துறையில் கூட்டம் அதிகமாக இருந்தது.

காவிரியில் தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். தொட்டியில் விழுந்த தண்ணீருக்காக காத்திருந்து புனித நீராடினர். சிலர் தேங்கி கிடக்கும் நீரில் சொம்பு மற்றும் கோப்பைகளை வைத்து தண்ணீரை வாரி உடலில் ஊற்றியதை காணமுடிந்தது. ஒரே இடத்தில் பலரும் புனித நீராடியதால் தண்ணீர் கலங்கிய நிலையில் காணப்பட்டது. குழாயில் இருந்தும் தண்ணீர் சரியாக விழாததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்