ஜென் கதை-துன்பத்தை விலக்கும் வழி

அந்த நாட்டை ஆண்டு வந்த மன்னனின் மனம் சற்றும் அமைதியின்றி தவித்து வந்தது. அவனது நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை.

Update: 2017-05-30 07:08 GMT
ந்த நாட்டை ஆண்டு வந்த மன்னனின் மனம் சற்றும் அமைதியின்றி தவித்து வந்தது. அவனது நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. அவனது சிறப்பான ஆட்சியின் காரணமாக வறுமை தொலைந்து போயிருந்தது. மக்கள் வரிச்சுமை இன்றி இன்பமாக வாழ்ந்தனர். கள்வர் பயம் இல்லை. கலைகள் தழைத்து வளர்ந்திருந்தன. புலவர்களும், அறிஞர்களும் கவுரவிக்கப்பட்டனர். நாடே சுபீட்சமாக இருந்தபோதிலும், தன்னுடைய மனம் மட்டும் அமைதியில்லாமல், ஏதோ ஒரு சுமையோடு இருப்பதை மன்னன் அறிந்தான்.

இந்த நிலையில் அவன் ஆட்சி செய்த நாட்டில் உள்ள ஒரு ஊருக்கு ஜென் குரு ஒருவர் வந்திருப்பதாக மன்னன் அறிந்தான். அவரைச் சந்தித்தால் தன்னுடைய மனம் அமைதி அடைய ஏதாவது வழிகாட்டுவார் என்று எண்ணிய மன்னன், உடனடியாக அவரைப் போய் சந்தித்தான்.

ஊரின் ஒதுக்குபுறமாக இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார் ஜென் குரு.

மன்னனை அன்புடன் வரவேற்ற குரு, அவனிடம் மனம் விட்டு பேசினார். அப்போது அவனுடைய மனதில் இருக்கும் குழப்ப நிலையை உணர்ந்து கொண்டார்.

‘அரசே! நாட்டை காக்கும் பணிகள் அனைத்தும் சரியாக நடக்கிறதல்லவா?’ என்றார் குரு.

‘ஆம்.. சுவாமி! அதில் ஒரு குறையும் இல்லை. என் ஆட்சியின் கீழ் வாழும் மக்களும் கூட, எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் தான் வாழ்ந்து வரு கிறார்கள்’ என்றான் மன்னன்.

‘அப்படியானால் உனக்கு என்ன குறை?’ என்றார் குரு.

‘அதுதான் எனக்கும் புரியவில்லை, சுவாமி. எல்லாம் நிறைவாக இருந்தும், என் மனம் கொஞ்சம் கூட அமைதி இன்றி தவித்து வருகிறது’ என்றான் மன்னன்.

குரு சொன்னார். ‘சரி.. எனக்காக ஒன்று செய். உனது நாட்டை எனக்குக் கொடுத்துவிடு’.

இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தாலும், ‘எடுத்துக் கொள்ளுங்கள் சுவாமி’ என்று கூறினான் மன்னன்.

இப்போது மீண்டும் குரு, ‘சரி.. நாட்டை என்னிடம் கொடுத்து விட்டாய். நீ என்ன செய்வாய்?’ என்றார்.

மன்னனோ, ‘என்னுடைய வழிச் செலவுக்கு கொஞ்சம் பொருள் எடுத்துக் கொண்டு, எங்காவது சென்று விடுவேன்’ என்றான்.

குரு மென்மையாக சிரித்தார். ‘ஏனப்பா.. நாட்டையே எனக்குக் கொடுத்து விட்ட பிறகு, அதில் உள்ள கஜானாவும் என்னுடையது தானே. அதில் இருந்து பொருளை எடுக்க உனக்கு ஏது உரிமை?’ என்று மடக்கினார்.

சற்றே திகைத்தாலும், ‘நீங்கள் சொல்வது சரிதான். நான் இப்படியே புறப்படுகிறேன். எங்காவது போய்.. ஏதாவது ஒரு வேலை செய்து பிழைத்துக் கொள்வேன்’ என்று எதற்கும் தயாராய் இருப்பதாகச் சொன்னான் மன்னன்.

உடனே குரு, ‘ஏதாவது வேலை செய்யப் போகிறாய். அந்த வேலையை என்னிடம் செய்யலாமே’ என்றவர், ‘நீ என்னுடைய பிரதிநிதியாக இந்த நாட்டை பராமரித்து வா. உன் செலவுக்கு அரண்மனை பொக்கிஷத்தில் இருந்து ஊதியம் பெற்றுக்கொள். எனக்கு எப்போது வசதிப்படுமோ, அப்போது நான் வந்து கணக்கு வழக்குகளைச் சரிபார்த்துக் கொள்கிறேன்’ என்றார்.

‘சரி..’ என்று ஒப்புக்கொண்டு நாடு திரும்பினான் மன்னன். கடகடவென்று இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.

திடீரென ஒரு நாள் மன்னனைக் காண்பதற்காக அரண்மனைக்கு வந்து சேர்ந்தார் குரு.

அவரை அரண்மனை வாசல் வரை வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான் மன்னன்.

குருவை, மன்னனுக்கான ஆசனத்தில் அமரச் செய்தான்.

‘என்ன அரசே! நாடு எப்படி இருக்கிறது?’ என்று கேட்டார் குரு.

‘சுபீட்சமாய் இருக்கிறது சுவாமி. கணக்கு வழக்கு களைக் கொண்டு வருகிறேன். எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று நீங்கள் ஒரு முறை பார்த்து விடுங்கள்’ என்று கணக்கு வழக்கு குறித்து வைத்திருக்கும் குறிப்பேட்டை எடுத்துவர எழுந்தான் மன்னன்.

அவனைத் தடுத்து நிறுத்திய குரு, ‘கணக்குகள் இருக்கட்டும். உன் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது?’ என்றார்.

‘என் மனம் முன் எப்போதும் இல்லாத வகையில் அமைதியாய் இருக்கிறது’ என்றான் மன்னன்.

‘அது ஏன் என்ற காரணம் அறிந்து கொண்டாயா?’ என்ற குருவின் கேள்விக்கு, மன்னனால் பதிலளிக்க முடியவில்லை.

குருவே தொடர்ந்தார். ‘இதற்கு முன்பு நீ செய்த ஆட்சிக்கும், இந்த இரண்டு ஆண்டு காலத்தில் நீ செய்த ஆட்சிக்கும் ஏதாவது மாறுதல் உண்டா?’ என்று நிதானமாக கேட்டார் குரு.

‘இல்லை’ என்றான் மன்னன்.

‘அதே அரண்மனை, அதே அதிகாரிகள், அதே படை, அதே மக்கள். ஆனால் இப்போது உனக்கு நிம்மதியிருக்கிறது. அப்போது அது இல்லை. அதற்கான காரணம் என்ன?’ என்றார் குரு.

மன்னன் விழித்தான்.

குரு விளக்கத் தொடங்கினார். ‘அப்போது இந்த ஆட்சி, அரசாங்கம் உன்னுடையது என்று நினைத் திருந்தாய். இப்போது இது வேறு ஒருவருடையது, நாம் அவரிடம் பணியாற்றும் ஒரு பிரதிநிதி என்றிருக்கிறாய். ‘இது என்னுடையது’ என்று நீ எண்ணிய வரையில் உன் மனம் துயரத்தால் திண்டாடியது. ‘இது எனதில்லை’ என்ற எண்ணம் உனக்குள் வந்ததும், உன் மனதின் துயரம் விலகி அமைதி நிலவுகிறது.

எந்தப் பொருளையும் என்னுடையது என்று எண்ணும் போதுதான், அதன் இன்ப- துன்பங்கள் நம்மை தாக்குகின்றன. இன்பம் இலகுவானது. வந்த வேகத்தில் சென்று விடும். ஆனால் துன்பம் கடுமையானது. அது நம்மை மூழ்கடிக்கும் சக்தி படைத்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்த உலகம் நமதல்ல.. அதைப் படைத்தவன் யாரோ. நமது உடலும் நமக்குரியதல்ல. அதை நமக்கு அளித்தவர் யாரோ. ஆகவே ‘இது என்னுடையது அல்ல’ என்ற நினைப்புடன் நீயே இந்த ராஜ்ஜியத்தை ஆட்சி செய்து வா. அந்தப் பற்றற்ற நிலை உனக்கு வந்து விட்டால், உன்னுடைய மனதை துயரங்கள் அண்டாது’ என்ற குரு, மன்னனிடம் இருந்து விடைபெற்றுச் சென்றார்.

மேலும் செய்திகள்