நாவின் வன்மை!

நாவின் வன்மையால் இவ்வையத்தில் வாழ்ந்தோரும் உண்டு, வீழ்ந்தோரும் உண்டு.

Update: 2017-12-15 08:06 GMT
ரு உறுப்பை வைத்து ஒருவரை எடை போட முடியும் என்றால் அது நாக்குதான். ஒருவர் பேசும் வார்த்தைகளில் இருந்து அவரது குணாதிசயங்களையும், அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் நாம் தெள்ளத்தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

நாவின் வன்மையால் இவ்வையத்தில் வாழ்ந்தோரும் உண்டு, வீழ்ந்தோரும் உண்டு. அது மட்டுமின்றி நம்முடைய உறுப்புகள் யாவும் இறைவன் நமக்களித்த அருட்கொடைகளாகும். நாம் அவற்றைத் தவறாகப் பயன்படுத்தும் பட்சத்தில் அவை நமக்கு எதிராக இறைவனிடத்தில் சாட்சி சொல்லும். எனவே நம்முடைய உறுப்புகளை நல்ல விதமாகப் பயன்படுத்துகிறோமா என்பதைப் பற்றி அதிகக் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான். ‘(நபியே!) நீங்கள் அறியாத யாதொரு விஷயத்தையும் நீங்கள் பின்தொடராதீர்கள்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப் பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்’. (17:36)

‘முஸ்லிம்களில் சிறந்தவர்கள் யார்?’ என்று ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது ‘எவருடைய நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)’ என்று பதில் அளித்தார்கள்.

மக்கள் நாவினால் மிகச் சாதாரணமாகச் செய்யும் பாவம் பொய் சொல்வதாகும். பொய்யை ஒரு பொருட்டாகவே மதிக்காத மக்கள் எடுத்தெற்கெல்லாம் பொய் சொல்கிறார் கள்.

ஒரு முஸ்லிம் பொய் சொல்வதில் இருந்து தன்னை முழுமையாக விலக்கிக் கொள்ளவேண்டும். தன்னுடைய சொல், செயல் இரண்டிலும் வேறுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும். வாய்மை தவறாதவர்களாக இருக்க வேண்டும். இறை வசனம் இவ்வாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறது: ‘நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். மேலும், (சொல்லிலும், செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்’. (9:119)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘நபி (ஸல்) அவர்களுக்கு பொய்யை விட மிக வெறுக்கும் விஷயம் எதுவும் கிடையாது’. (அஹ்மத்)

‘ஒரு முமின் கோழையாக இருப்பானா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதில் அளித்தார்கள். ‘ஒரு முமின் உலோபியாக இருப்பானா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கும் ‘ஆம்’ என்று பதில் அளித்தார்கள். ‘ஒரு முமின் பொய்யனாக இருப்பானா?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘இல்லை’ என்று பதில் அளித்தார்கள். (முஅத்தா)

இன்னும், ‘விளையாட்டுக்குக் கூட பொய் சொல்வதை விட்டு விடுகிறவனுக்கு சுவர்க்கத்தில் மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

வேடிக்கைக்கு கூடப் பொய் சொல்வதை நாம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். மேலும் தம் இறைவனுக்கு அஞ்சிக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் மனதில் பொய் என்னும் விஷ விதையை ஒரு நாளும் விதைத்து விடக் கூடாது. நாம் எப்படியோ அப்படியே நம் குழந்தைகளும் என்பதை நினைவில் இருத்தி எந்த நிலையிலும் நாமும் பொய் சொல்லாமல் நம் குழந்தைகளுக்கும் அதே பயிற்சியை அளிக்க வேண்டும்.

இன்னும் மக்கள் தங்கள் நாவினை புறம் பேசுவதற்கும், மற்றவர்களைப் பற்றி அவதூறுகளைப் பரப்புவதற்கும் பயன்படுத்தி அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகிறார்கள். இரு மனிதர்கள் சந்தித்துக் கொண்டாலே மூன்றாவது மனிதரைப் பற்றி பேசும் பலவீனம் உடையவர்களாகவே மனிதர்கள் இருக்கின்றனர். நாம் அதைத் தவறென்று உணரும்பொழுதாவது உடனடியாக இறைவனிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

‘நம்பிக்கையாளர்களே! அநேகமாக சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாக சந்தேகங்களில் சில பாவமானவைகளாக இருக்கின்றன. (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனுடைய மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுபவர்களை அங்கீகரிப்பவனும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்’. (49:12)

‘எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதே பேசட்டும் அல்லது வாய் மூடி மவுனமாக இருக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளது போல நாம் அதிகம் பேசுவதினாலேயே அதிகமதிகம் தவறுகள் செய்கிறோம். நம்முடைய பலவீனங்களையும் மற்றவர்கள் அறியுமாறும் செய்து விடுகிறோம். அதனால் நாவினை நாம் தேவையான நேரங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். எந்த அளவிற்கு நாம் குறைவாகப் பேசு கிறோமோ, அந்த அளவிற்கு நாவின் மூலம் நாம் பாவங்கள் செய்வது குறைந்து விடும்.

ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84 

மேலும் செய்திகள்