தங்கமாக மாறிய தாமிர தகடு

பூஜையின் முடிவில் அந்த தாமிர தகடுகள் தங்கமாக மாறியிருந்தன.

Update: 2018-02-21 09:37 GMT
வுன சாமிகளின் இயற்பெயர் பிச்சையா என்ற சிவய்யா. இவர் 1868-ம் ஆண்டு ஆந்திரபிரதேசம், பிரகாசம் மாவட்டம், நூனெவாரி பாளையம் கிராமத்தில் பாபன்னய்யா - சிதம்மா தம்பதியருக்கு மகனாய் பிறந்தார். அவருக்கு பிச்சையா என பெயரிட்டனர். பின்னர் குழந்தை இன்றி தவித்த லட்சுமிநரசய்யா- சுந்தரம்மா தம்பதியர், அவரை தத்து எடுத்துக் கொண்டனர். அவர்கள் வைத்த பெயரே ‘சிவய்யா’ என்பதாகும். பண்டியப்பள்ளி என்னும் கிராமத்தில் மவுன சாமிகள் வளர்ந்தார்.

சிறுவயதிலேயே மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றை எளிதில் கற்றுத் தேர்ந்தார். அதை மற்றவர்களிடம் கூறி மகிழ்ந்தார்.

சிவய்யாவுக்கு மணமாகி இரண்டு குழந் தைகள் பிறந்தது. 1894-ம் ஆண்டுகளில் குடும்பத்தினை காப்பாற்ற கூலி வேலைகளை செய்தார். ஆனால் அவரது மனமோ தவ வாழ்க்கை மீது நாட்டம் கொண்டது.

அனைத்தையும் உதறி தள்ளி விட்டு இமாலயம் செல்ல முடிவு செய்தார். கரடு முரடான காட்டு வழியாக அவர் கிளம்பினார். அங்கு கரடி போல் முடி வளர்ந்த யோகியைக் கண்டார். அவர் பெயர் வெங்கிடாசலபதி யோகி. அவரிடம் யோக நிலையை கற்கத் தொடங்கினார். வெங்கிடாசலபதி யோகி தியானத்தில் அமர்ந்திருக்கும் வேளையில், அவருக்கு இடையூறு ஏற்பட்டு விடாதபடி சிவய்யா பாதுகாப்பாக இருந்து வந்தார்.

ஒரு நாள் சிவய்யாவை, அந்த யோகி பரிவுடன் தன்னிடம் அழைத்தார்.

“உனது பக்தியையும், சேவையையும் கண்டு ஆனந்தமடைந்தேன். இந்த குன்றுகளிலும் முட்கள் நிறைந்த புதர்களிலும் வெப்பம், மழை, குளிர் பாராது மிகுந்த சந்தோஷத்துடன் சேவை புரிந்தாய். நான் உனக்கு வைத்த சோதனைகளில் எல்லாம் வெற்றி பெற்று விட்டாய். தற்போது எனது இறுதி காலம் வந்து விட்டது. எனவே நான் உனக்கு என் சித்துகளை கற்றுத் தருகிறேன். என் இறுதிச் சடங்கை முடித்து விட்டு உனது அருட்பணியைத் தொடங்கு” என்று அருள் வழங்கினார்.

அதன்படியே யோகியின் மறைவுக்குப் பின், அவரது இறுதிச்சடங்குகளை செய்த சிவய்யா, மலைகள், காடுகள் கடந்து இமாலயத்தை அடைந்தார். அங்கே ஒரு ஆஸ்ரமத்தில் அச்சுதானந்த சுவாமியை கண்டார். அவர் மிகப் பெரிய சித்தர். 2,500 வருடங்களுக்கு முன்பு நடந்தவற்றையும் அறியும் திறமை படைத்தவர். சித்தேஸ்வரி தேவியை தனது தவவலிமையால் தன் முன்பு தோன்ற வைக்கும் வல்லமை படைத்தவர். அவர் தான் சிவய்யாவுக்கு சன்னியாச தீட்சை அளித்தார். அவருக்கு ‘சிவசிதானந்தா’ என்ற பெயரும் சூட்டினார். அன்று முதல் சிவய்யா ‘சிவசிதானந்தா சுவாமிகள்’ ஆனார்.

அதன் பிறகு அவர், அச்சுதானந்த சுவாமி ஆலோசனையின் பேரில் தென்னகம் நோக்கி புறப்பட்டார். வரும் வழியும் பல இடங்களில் பலரை சந்தித்தார். சில இடங்களில் சிவசிதானந்தா சுவாமிகளிடம் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவரது ஆன்மிகப்பணி தடைப்பட்டது. இதனால் மன முடைந்த சிவசிதானந்தா சுவாமிகள் முன்பு அச்சுதானந்த சுவாமி தோன்றினார்.

“பலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தேவையில்லாத ஒன்று. எனவே யாரிடமும் தர்க்கம் செய்வதை தவிர்” என்று அருளினார்.

அன்று முதல் அவர் மவுன விரதம் இருக்கத் தொடங்கினார். மக்களை உய்விக்க வார்த்தை தேவையில்லை, செயல் பாடுகளே போதும் என்பதை உணர்ந்ததால், அவர் பேசவே இல்லை. இதனால் தான் அவரை அனைவரும் ‘மவுன சாமிகள்’ என்று அழைத்தனர்.

தென்னகம் வந்த அவர் குற்றாலம் வந்து மடம் அமைத்து பலருக்கும் நன்மைகளைச் செய்தார்.

மவுன சாமிகளின் குற்றாலம் மடத்தின் உள்ளே குமாரசுவாமிகள் சிலை மற்றும் அவரது தேவியர்கள் வள்ளி- தெய்வானை ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சக்கரம் வரையப்பட்ட தாமிர தகடுகள், சிலை களின் அடியில் வைப்பதற்காக பூஜையில் வைக்கப்பட்டன. பூஜையின் முடிவில் அந்த தாமிர தகடுகள் தங்கமாக மாறியிருந்தன. அதற்கு மவுன சாமிகளின் சொர்ண சித்தி என்னும் ரசவாத சக்தி தான் காரணம். தனது ரசவாத சக்தியால் எந்த ஒரு உலோகத்தினையும் தங்கமாக மாற்றும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார்.

இதுபோல பல சித்திகள் அவருக்கு கைகூடியிருந்தன. 3.10.1916-ல் ராஜராஜேஸ்வரி மற்றும் காமேஸ்வர சுவாமி களின் சிலை பிரதிஷ்டை நடந்தது. அந்த வேளையில் அதைப்பற்றி யாரும் பிரமிப்பாக பேசவில்லை.

மவுன சாமிகளின் காலத்துக்கு பின்பு சுமார் 90 வருடங்கள் கழித்து, ஆலயத்தின் கும்பாபிஷேகப் பணிகளுக்காக இந்தப் பீடத்தினை மருந்து சாத்த சிலையை அகற்றினார்கள். அப்போது மவுன சாமிகள் பிரதிஷ்டை செய்த போது உள்ளே வைத்திருந்த பூ உள்ளிட்ட பொருட்கள் வாடாமல் இருப்பதைக் கண்டு அனைவரும் பிரமித்துப் போனார்கள். அவரது தவ வலிமைய எண்ணி அனைவரும் வியப்புற்றனர்.

அவரது தவ வலிமையால் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு விஷயத்தையும் செய்தார். அது என்ன என்கிறீர்களா?.. வாருங்கள் பார்ப்போம்.

இவர் தன் தவ வலிமையால் தன்னுடைய உடல் பாகங்களை தனித் தனியாகப் பிரித்து வைக்கும் வல்லமை பெற்றவர் என்று கூறப்படுகிறது. இதைன அவர் வாழ்ந்த காலத்தில் பலரும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். யாரும் பார்த்து அதிர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே, மவுன சாமிகள் அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று இதுபோன்ற தவங்களில் ஈடுபடுவாராம். அப்படியும் ஒருசிலர் இதுபோன்ற காட்சிகளைக் கண்டிருக் கிறார்கள்.

குற்றாலம் என்றாலே மூலிகைகள் நிறைந்தது என நமக்கெல்லாம் தெரியும். இங்கு தவமேற்றும் சுவாமிகள் பலரும் மூலிகையின் மகத்துவத்தை அறிந்தவர்களே. அதுபோலவே மவுன சாமிகளும் மூலிகை மகத்துவத்தை அறிந்தவர். இவர் நீரழிவு, அஜீரணம், நெஞ்சக நோய், காமாலை உள்பட பல நோய்களை குணமாக்குவதில் வல்லுநர்.

ஒரு முறை முழுவதும் கண் பார்வை இழந்த ஒருவர், மவுன சாமிகளை நாடி வந்தார். அவரின் கண் பார்வையை மூலிகைக் கொண்டு சரி செய்திருக்கிறார். மேலும் கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலத்தில் வலி தெரியாமல் இருக்க, ஒரு வகையான மூலிகையை தலைக்கு அடியில் வைக்கும் முறையையும் இவர் உருவாக்கினார். இதனால் வலி நீங்கியதுடன் அந்தப் பெண்களுக்கு சுக பிரசவமும் நடைபெற்றிருக்கிறது. வெட்டிய கால்களை ஒட்டவைக்கவும், எலும்பு முறிவுகளை சீர் செய்யவும் மருந்துகளை உருவாக்கி மக்களுக்கு பயன்படுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்