ஆன்மிகம்
வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை

பூந்தமல்லியில் திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் 3 கருட சேவைகள் நடைபெறுவது மிகவும் சிறப்பாகும்.
பூந்தமல்லி,

பூந்தமல்லியில் திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ரங்கநாதர், சீனிவாசர், வரதராஜபெருமாள் ஆகிய 3 பெருமாள்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் 3 கருட சேவைகள் நடைபெறுவது மிகவும் சிறப்பாகும்.

இந்த ஆண்டும் நேற்று காலை 3 கருடசேவைகள் நடைபெற்றது. முன்னதாக மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டது. உற்சவர்கள் ரங்கநாதர், சீனிவாசர், வரதராஜபெருமாள் ஆகிய 3 பேரும் தனித்தனியாக 3 கருட வாகனங்களில் எழுந்தருளினர். கோவில் வளாகத்தில் இருந்து கோபுர தரிசனம் முடிந்து திருவீதி உலா தொடங்கியது.

3 கருட வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள்களும் சன்னதி தெரு, டிரங்க் ரோடு என கோவிலின் முக்கிய மாட வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் கோவில் வளாகத்தை வந்தடைந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அமுதா செய்து இருந்தார்.