மாலவனும்.. வேலவனும்..

மாமன் மாலவனுக்கும், மருமகன் வேலவனுக்கும் உன்னதமான ஒற்றுமைகள் பல இருக்கின்றன.

Update: 2018-04-05 23:15 GMT
திருமால் பராசக்தியின் சகோதரன் என்ற உறவில், உமையின் பாலன் முருகனுக்குத் தாய்மாமன். அதோடு திருமால் - திருமகள் திருவருளால் அவதரித்த வள்ளியைக் கந்தர்வ மணம் புரிந்து கொண்டதால், திருமாலுக்கு முருகப்பெருமான் மதிப்புமிகு மருமகனும் ஆவார். 

ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் நமது பார்வையில், வள்ளி- தெய்வானை சூழ நிற்கும் கந்தவேலும், ஸ்ரீதேவி- பூதேவி சமேத கடல்நிறக் கடவுளும் ஒன்று போலத் தோன்றுவதை அனைவரும் உணர்ந்திருக்கலாம்.

* ‘துஷ்ட நிக்கிரஹ சிஷ்ட பரிபாலன’ என்பது போல அரக்கர்களை அழிக்கவும், அன்பர் களைக் காக்கவும் வலக் கரத்தில் சக்கரப்படையைச் சுழற்றியபடியே நிற்கும் மாமனைப் போலவே, பகை வெல்லவும் பக்தர்களுக்கு அருளவும் வலது கரத்தில் வேலாயுதம் தாங்கியபடி மருமகன் நிற்கிறார்.

* முக்கண்ணனைப் போல ரிஷபமோ, அம்பிகைபோல சிம்மமோ வாகனம் இல்லாமல், கருட வாகனத்தில் ஏறி வட்டமிட்டு வருபவர் கேசவன். அதே போல மயில் வாகனத்தில் அமர்ந்து பக்தர்கள் குறைதீர்க்க பறந்து வருபவர் குமரன். இருவருக்கும் பறவைகளே வாகனம். இரண்டு பறவைகளும் பாம்புக்குப் பகைவர்கள்.

* மயிலிறகைத் தலையில் சூடியிருக்கும் சின்னக் கண்ணன், கருமைநிற அழகன். மயிலையே வாகனமாகக் கொண்ட குழந்தை முருகனோ, மனங்கவரும் பேரழகன். கன்னத்தில் முத்தமிட்டு அள்ளி அணைக்கத் தோன்றும் இருவரின் மழலை உருவங்களும் கண்கொள்ளக்காட்சிகள்.

* தண்ணந்துழாய் மலர் மாலை மாலவனுக்கு பிரியம் என்றால், தண்கடம்ப மலர் மாலை வேலவனுக்கு விருப்பமானது.

* ‘தேவசேனாபதி ஸ்கந்தனே போர்க்களத்தில் வல்லவன்’ என்று கீதையில் கிருஷ்ணன் சான்று பகர்கிறான். கீதை என்றவுடன் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. அர்ச்சுனனுக்கு உபதேசித்தவன் பரந்தாமன். தந்தை பரமசிவனுக்கே தத்துவம் மொழிந்தவன் முருகப்பெருமான். எனவே ஞானாசிரியர் தகுதியில் மாமனையும் மிஞ்சிவிட்டான், மருமகன்.

முருகன் கோவில்களில் திருமால்

நில உலகில் உள்ள திருக்கோவில்களிலும் கூட, வேலவன் மாலவனைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறான்.

* முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றில், தெய்வானையை திருமணம் புரிந்துகொள்ளும் கோலத்தில் அருளும் முருகனின் அருகே, பவளக் கனிவாய்ப் பெருமாளாக மாலவன் மேற்கு நோக்கி நின்று ஆசி வழங்கு கிறார்.

* இரண்டாம் படை வீடான அலைகள் தவழும் திருச்செந்தூரில் சூராதி அவுணர்களை அழித்த வெற்றிவேல் பெருமான், செந்திலாண்டவனாகத் தரிசனம் தருகிறார். அந்த ஆலயத்தின் திருச்சுற்றில் செந்தில் கோவிந்தனாக, பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக் கிறார். அவர் அருகில் அரங்கனும், லட்சுமியும் காட்சி தருகின்றனர்.

* ஆறாம் படை வீடான பழமுதிர்ச் சோலை எங்கே இருக்கிறது?. திருமால் கள்ளழகராக மலை அடிவாரத்தில் கோவில் கொண்டிருக்க, அந்த மலை மீது உள்ள பழமுதிர்ச் சோலையில்தான், அவ்வைக்கு கனி உதிர்த்து தந்த ஆறுமுகம் எழுந்தருளியிருக்கிறான்.

மருமகனைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடும் மாமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நேரில் கண்டதில்லை. ஆனால் இத்தலப் பெருமாள், மருமகன் முருகனை தன் தலை தாண்டி உயர்ந்திருக்கும் மலை மீது தூக்கி வைத்திருப்பது என்பது கற்பனைக்கு எட்டாத தோற்றம்.

இதனை ஒரு கவிஞர்,

‘மருமகனைச் சிரம்மேல் போற்றும் மாமன்

பெருமையைக் கேட்டுளோம், நேரில் கண்டிலம்

தந்தைக் கோதியோன் திருமால் தலைமேல்

விந்தையாய் வீற்றுனான், சிந்தையைக் கவர....’ என்று வர்ணிக்கின்றார்.

* சில்ப முனிவருக்குக் கண்ணொளி வழங்கிய கந்தக் கடவுள், ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்துள்ள ஆலயம் எண்கண் என்னும் திருத் தலம். இந்த ஆலயத்தை ஒட்டி கருடன் மீது அமர்ந்தபடி நாராயணப்பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.

* சூரனை வதம் செய்வதற்காக அன்னையிடம் வேல் வாங்கிய சிங்காரவேலன் வீற்றிருக்கும் தலம் சிக்கல். இந்த ஆலயத்தில் கோல வாமனப் பெருமாள் காட்சி தருகிறார்.

இப்படி சரவணப் பெருமான் உறையும் திருக் கோவில்கள் மட்டுமல்ல, கந்தனைப் போற்றும் காவியங்களிலும் காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவுக்குப் புகழ்மாலை சூட்டப்பட்டுள்ளது.

எல்லாத் திருக்கோவில்களிலும் வேல் ஏந்தி நிற்கும் முருகப்பெருமான், ஆவூர்ப் பசுபதீசுரம், திருச்சாய்க்காடு, திருக்கொள்ளிக்காடு, திருவையாறு போன்ற தேவாரப்பாடல் கண்ட திருத்தலங்களில் வில் ஏந்தும் பெருமானாக நிற்கிறார். எல்லாவற்றையும் விட மாமனைப் போல சங்கு சக்கரம் ஏந்தி, அரிசில்கரைப் புதூர் என்ற ஆலயத்தில் காட்சி தருகிறார், முருகக்கடவுள். மாலவன் போலவே மருமகனும் என்பதாகக் காட்டுகிறது.

மாமன் திருமாலையும், மருமகன் முருகனையும் ஒப்பிட்டும் பல பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் வடித்த திருப்புகழ் முதல் பல பாடல்களில்.. குறிப்பாக கந்தர் அலங்காரச் செய்யுள்கள் அதனை மெய்ப்பிக்கின்றன.

‘.......மாவலிபாய் மூவடி கேட்டன்று, மூதண்ட கூட முகடு முட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே’ என்கிறது ஒரு பாடல்.

அதாவது.. ‘மகாபலி மன்னனிடம் மூன்று அடி களைக் கேட்டு உலகளந்து, இப்பெரிய அண்டத்தின் உச்சியைத் தொடும் அளவுக்கு திரிவிக்கிரக அவதாரம் எடுத்து கால் வைத்த மகாவிஷ்ணுவின் மருமகனாகிய முருகனின் திருவடி, தேவர்கள் தலைமீது பட்டது’ என்று மாமன்- மருமகனின் திருவடிப் பெருமைகள் சொல்லப்படுகின்றன.

‘.................... கூற்றுவன் பாசத்தினால்
பிடிக்கும் பொழுது வந்து அஞ்சலென்பாய் பெரும்
பாம்பினின்று நடிக்கும் பிரான் மருகா’

என்ற பாடலில், ‘பலருக்குத் துன்பத்தைத் தந்து கொண்டிருந்த காளிங்கன் என்ற பெரிய நாகம் படமெடுத்தாட, அதனை அடக்கி.. அதன் சிரசின் மீது ஏறி நின்று வெற்றி நடனம் ஆடிய கண்ண பிரான் மருகனே! நீ எமன் பாசக் கயிற்றோடு வரும்போது, “அன்பர்களே அச்சப்படாதீர்கள்” என்று அடைக்கலம் கொடுப்பவன் அல்லவா?’ என்கிறார் புலவர்.

இது தவிர பல பாடல்களில் மாமனின் பெருமைகளைச் சொல்லி, மருமகனைப் புகழ்ந்திருக்கிறார்கள்.

‘............ கரி கூப்பிட்ட நாள்
கராப்படக் கொன்ற கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்
பாராக்ரம வேல .....’

இந்தப் பாடலில் ‘முதலையின் பிடியில் சிக்கிய யானையின் “ஆதி மூலமே!” என்ற அபயக்குரலைக் கேட்டு ஓடிவந்து, முதலையை தனது சக்கர ஆயுதத்தால் வீழ்த்தி கஜேந்திரனைக் காத்த கருணை மிகுந்த கடவுள் மெச்சிப் பாராட்டும் சூரசம்ஹார வேலவனே’ என்பதன் மூலம் மாமன், மருமகன் இருவரின் பராக்கிரமமும் வெளிப்படுகிறது.

‘................ பதிதாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் மட்டுழ
மதித்தான் திருமருகா மயிலேறிய மாணிக்கமே’

என்ற பாடலில், ‘மந்தார மலையை மத்தாக்கி.. வாசுகி என்ற பாம்பை கயிறாக்கி பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்து தேவர்களுக்கு வழங்கி, அவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்த பரந்தாமனின் திருமருகா.. அசுரர்குலத்தை அழித்த தேவர்களை மீட்டு அவர் களுக்கு வாழ்வு தந்த மயில் வாகனனே’ என்கிறார்.

இவைகள் எல்லாவற்றையும் விட, உறவைச் சொல்லி உரிமை கொண்டாடும் போது.. முதன்முதலில் மாமனுக்கு மரியாதை கொடுத்து ‘மாலோன் மருகனே’ என்று அழைத்துவிட்டுத் தான், முருகப்பெருமானின் தந்தையான ஈசனுக்கே இடம் தந்திருக்கிறார் அருணகிரிநாதர்.

ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், வாமனாவதாரம் வராகவதாரம் என திருமாலின் பெருமைகளை எல்லாம் சொல்லிச் சொல்லி மாய்த்து, அத்தகு புகழுக்குரிய பேரன்புக்குட்பட்ட மருமகனே என்று வேலவனை வாயாரப் பாடுகிறார்.

அழகில், ஆற்றலில், அருளில், மாமனும் மருமகனும் ஒருவருக்கொருவர் ஒப்பானவர்கள் என்பதே உண்மை.

டாக்டர் ச.தமிழரசன், தஞ்சாவூர். 

மேலும் செய்திகள்