சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகாரச் செயல்

இன்றைய காலகட்டத்தில் நமக்கு வந்துசேரும் அனேக தகவல்கள் ஊகங்களால் நிரம்பி வழிகின்றன. நாமும் அவற்றை அப்படியே நம்பி பரப்புகின்றோம். அவை உண்மைதானா என உறுதி செய்வதற்கு எவரிடமும் நேரம் இல்லை. நேரம் இருந்தாலும் விருப்பம் இருப்பதில்லை.

Update: 2018-04-27 01:15 GMT
‘வாட்ஸ்அப்’ மற்றும் முகநூலில் வந்து குவியும் செய்திகளை அவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல் ‘தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்’ என்ற ஒற்றைப் பின்குறிப்புடன் வருவனவற்றை அப்படியே பரப்புவதால், எத்தனை எத்தனை மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள், மன வேதனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை யார் தான் எண்ணிப்பார்ப்பது?

அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தி உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மை நிலையை நன்கு விசாரித்துத் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினருக்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது’’. (திருக்குர்ஆன் 49:6)

இன்று அனேக சமூக ஊடகங்கள், ஊகங்களால்தான் செய்தியை நிறைக்கின்றன. பரபரப்பான செய்திகள் வேண்டும் என்பதால் அவசர கதியில் வெந்தது பாதி, வேகாதது மீதி என்ற ரீதியில் செயல்படுகின்றனர். செய்திகளை முந்தித் தருவதில் இருக்கும் அவசரம், அவற்றின் உண்மைத் தன்மை குறித்து அலசி ஆராய்வதில் இருப்பதில்லை.

உண்மையில் இதுஒருவகை சமூகப் பொறுப்பின்மையின் வெளிப்பாடே. ‘சமூகத்தில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் எங்களுக்கு என்ன?.. எங்களுக்குத் தேவை சூடான செய்திகள் மட்டுமே’ என்பது ஒருவகை மோசடியே.

செய்தி சொல்வதில் ஐந்தறிவு கொண்ட ஒரு பறவை நம்மைவிட உயர்பண்புடன் விளங்கியதாக திருக்குர்ஆன் கூறுகிறது. ஆம், ஹுத் ஹுத் எனும் கெண்டலாத்திப் பறவைதான் அது.

ஸபா என்ற தேசத்தின் செய்தியை சுலைமான் (அலை) அவர்களிடம் அது கொண்டுவந்த போது மனம்போன போக்கில் வாய்க்குவந்தபடி தட்டிவிடவில்லை. மாறாக அது இவ்வாறு கூறியது: ‘‘நான் ஸபா பற்றி உறுதியான செய்தியைத் தங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன்’’. (திருக்குர்ஆன் 27:22)

அந்தப் பறவை பொய் சொல்லாது என்று சுலைமான் (அலை) அவர்களுக்கு நன்கு தெரியும். ஆதலால்.. ஆஹா.. ஓஹோ.. ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது என்று உடனே சுலைமான் (அலை) மகிழ்ச்சி அடையவில்லை. அதுகுறித்து உடனடியாக தீர்க்கமான முடிவும் எடுக்கவில்லை.
மாறாக, ‘‘சுலைமான் கூறினார்: நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய்யர்களோடு நீ சேர்ந்து விட்டாயா என்பதை இப்போதே நாம் பார்த்து விடுகின்றோம்’’. (27:27)

சுலைமான் (அலை) விசாரித்தார்கள். உண்மையை அறிந்து கொண்டார்கள். பின்னரே நடவடிக்கையில் இறங்கினார்கள். இதுதான் இஸ்லாம் கற்றுத்தரும் பண்பாடு.

எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் ஒரு செய்தியை நம்புவதும்.. உடனே பரப்புவதும், உறுதியற்ற செய்தியை வைத்து ஊகத்தால் முடிவெடுப்பதும் பெரும் தவறு. மட்டுமல்ல அது பெரும்பாவமும்,  சமூகப் பொறுப்புணர்வற்ற தன்மையும் ஆகும்.

இறைவன் கூறுகின்றான்: ‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக ஊகிப்பதை (சந்தேகம் கொள்வதை) தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன’’. (திருக்குர்ஆன் 49:12)

பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊகங்களே பாவங்களாக உருப்பெறுகிறது. ஊகத்தின் ஆணிவேர் கெட்ட எண்ணமே. ஏனெனில் கெட்ட எண்ணம்தான் துருவித்துருவி ஆராயச் சொல்லும். துருவித்துருவி ஆராய்வது அடுத்தவர் குறித்து புறம்பேச வழிவகுக்கும். புறம், பொறாமைக்கு இட்டுச் செல்லும். பொறாமை, கொலைக்கு வழிவகுக்கும்.

ஆக, பிறர் குறித்த தவறான ஓர் ஊகம் எவ்வாறு உயிர் பெறுகிறது என்பதைப் பாருங்கள். நாம் நினைப்பது போன்று ஊகம் என்பது வெறுமனே ஒரு கெட்ட எண்ணம் மட்டுமல்ல. மாறாக, சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகாரச் செயல். இம்மையிலும் மறுமையிலும் அதற்கு பெரும் தண்டனை உள்ளது.

‘‘இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மை யிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர்’’. (திருக்குர்ஆன் 24:19)

முஅத்தா போரில் நபிகள் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்ட மூன்று தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக வீரமரணம் அடைகின்றனர். இறுதியாக காலித் பின் வலீத் (ரலி) தளபதியாக பொறுப்பை ஏற்கிறார்.

போர்க்களம்... எதிரிகளின் எண்ணிக்கை முஸ்லிம்களைவிட மிகமிக அதிகம். காலித் (ரலி) அவர்களின் புத்திக்கூர்மையால் ஒரு கட்டத்தில் எதிரிகள் பின்வாங்கி ஓட, தொடர்ந்து சென்று அவர்களைத் தாக்க வேண்டாம் என்று காலித் (ரலி) உத்தரவு பிறப்பிக்கின்றார். அன்று மாலையே மதீனா திரும்புமாறும் மறு உத்தரவு வருகிறது. படை மதீனாவுக்குத் திரும்புகிறது.

ஆயினும் படை வந்தடையும் முன்னரே அவர்கள் குறித்த செய்தி காட்டுத் தீ போல் மதீனத்து மக்களிடம் வேகமாகப் பரவுகிறது. ஆம், இஸ்லாமியப் படை எதிரிகளோடு போர் புரியாமல் பின்வாங்கி வருகிறது என்ற ஊகச்செய்தி பரவத்தொடங்கியது.

நகருக்குள் நுழைந்த இஸ்லாமியப் படையை வாழ்த்தி வரவேற்ப தற்குப் பதிலாக, ஒட்டுமொத்த படைமீதும் மண் வாரி வீசினர் மக்கள்.
செய்தி கேள்விப்பட்ட நபிகளார் (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் நமக்கான பாடம்.

ஏனையவர்களைப் போன்று நபிகளாரும் அவசரப்பட்டார்களா..? வானுக்கும் பூமிக்கும் குதித்தார்களா? ஒருபோதும் இல்லை. காலித் (ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்.

‘‘இறைவனின் தூதரே! எதிரிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சம். முஸ்லிம்களோ வெறும் பத்தாயிரம். புறமுதுகிட்டு ஓடும் எதிரிகளை விரட்டிச் சென்று தாக்கும்போது திடீரென எதிரிகள் எதிர் தாக்குதல் நடத்திவிட்டால் நமக்குத்தான் பெரும் உயிர் சேதம் ஏற்படும். நாங்கள் புறமுதுகு காட்டி ஓடிவரவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்திற்காக திரும்பி வந்துள்ளோம்’’ என்று காலித் (ரலி) விளக்கினார்.

கூடிநின்ற மதீனத்து மக்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘‘இவர்கள் விரண்டோடி வந்தவர்கள் அல்லர். உறுதியுடன் நிற்பவர்கள், இன்ஷா அல்லாஹ்’’. (புகாரி)

இதுதான் பண்பாடு! இதுதான் நாகரிகம்!! இதுதான் இஸ்லாம்!!!

ஆனால் நாம்...?

- மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

மேலும் செய்திகள்