மகிமை மிக்க லைலத்துல் கத்ர் இரவு

இஸ்லாம் வலியுறுத்தும் 5 கடமைகளில் 3-வது கடமை நோன் பாகும். இது ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

Update: 2018-06-08 08:23 GMT
ஆண்டில் 11 மாதங்கள், பகல் பொழுதில் விரும்பியதை எல்லாம் உண்டு கழித்து, பருகி மகிழ்ந்து வாழ்ந்து வருகிறோம். இந்த நிலை மாறி ரமலானில் ஒரு மாத காலம் பகலில் உண்ணாமலும், பருகாமலும், ஒழுக்கத்தால் மனதை கட்டுப்படுத்தியும் நோன்பு நோற்கிறோம். மனதையும், உடலையும் ஒழுங்குபடுத்துகின்ற ஒரு மாபெரும் பயிற்சியை இந்த நோன்பு கற்றுத்தருகின்றது.

இந்த ஆன்மிக பயிற்சி மனித மனங்களில் இரக்கச் சிந்தனைகளை சுரக்கச் செய்கிறது. மேலும் பிற மனிதர்களின் பசியையும், இன்னல்களையும் அனுபவப்பூர்வமாக நமக்கு உணர்த்தி, தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையை நம்மிடம் வளரச் செய்கின்றது.

நற்பாக்கியங்கள் குவிந்து கிடக்கும் ரமலானில், அதற்கு ஒரு மணி மகுடம் சூட்டுவதாக அமைந்திருப்பது லைலத்துல் கத்ர் இரவாகும். இதன் மகிமை குறித்து இறைமறை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

‘நபியே! மகிமை பொருந்திய (லைலத்துல் கத்ர்) இரவு, என்னவென்று உமக்கு தெரியுமா? (அந்த இரவு) மகிமை மிக்க இரவு (அது) ஆயிரம் மாதங்களைவிடவும் மேன்மையானதாகும்’ (97:2,3).

இந்த இரவின் சிறப்பு குறித்து இறைதூதர் நபி (ஸல்) அவர்கள் கூறுவதை பார்ப்போம்:

‘யார் (இந்த) லைலத்துல் கத்ரின் (இரவில்) நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (இறைவனை) வணங்குகிறார்களோ, அவர்களது முன்பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றது. இன்னும் யார் ரமலானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்நோக்கி நோன்பு நோற்கின்றார்களோ, அவர்களது முந்தைய பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றது. (நூல்: புகாரி)

மனிதர்களின் பிழைகள் மன்னிக்கப்பட வேண்டும், அதனால் அவர்கள் தூய்மை அடைய வேண்டும் என்பதற்காகவே ரமலான் நோன்பும், லைலத்துல் கத்ர் இரவும் உள்ளது என்பதை அண்ணலாரின் அமுத மொழி அறிவுறுத்தும் செய்தியாக உள்ளது.

லைலத்துல் கத்ர் இரவில் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணலாரிடம் வினவிய போது, அவர்கள் இவ்வாறு ஒரு பிரார்த்தனையை கற்றுக்கொடுத்தார்கள்.

‘இறைவனே, நிச்சயமாக நீ பிழைகளை பொருத்துக் கொள்ளக் கூடியவன், (பிழைகள் செய்வதை விட்டும் மனம் திருந்தி உன் பால்) மன்னிப்பு கோருவதை விரும்பக்கூடியவன் (அத்தகைய என் இறைவா) என் பிழைகளை பொருத்து அருள் புரிவாயாக’.

பிழைகளில் இருந்து மனிதன் பாடம் கற்றுக்கொண்டு, அத்தகைய பிழைகள் மீண்டும் நடக்காதபடி உறுதி பூண்டு, தனது இறைவனிடம் மன்றாடி பிழைகளை மன்னிக்க பாவ மன்னிப்பு தேடுவது என்பது மிகப்பெரிய பாக்கியமாகும். அதனை இந்த மகிமை மிக்க இரவில் பெற முடியும் என்பதையே நபிகளாரின் இந்த பிரார்த்தனை வலியுறுத்தும் கருத்தாகும்.

இந்த லைலத்துல் கத்ர் இரவு ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் வரும் ஒற்றைப்படை இரவுகளான 21, 23, 25, 27, 29 ஆகிய 5 இரவுகளில் ஒன்றில் பொதிந்து உள்ளது. இதனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் தொட்டே ரமலானின் கடைசி பத்து நாட்கள், பள்ளிவாசலில் தங்கியிருந்து பிரார்த்தனை செய்யும் ‘இக்திகாப்’ என்ற அழகிய நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

உலகியலின் தொடர்பை குறைத்து இறை நெருக்கத்தில், நம்மை பரிபூரணமாக நனையச்செய்திட இந்த ‘இக்திகாப்’ நிகழ்வு பெரிதும் உதவுகின்றது.

குர்ஆன் இறங்கிய மாதம் ரமலான். உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி, ஆன்மிக பலத்தை அதிகரிக்கச் செய்யும் மாதம் ரமலான். ஆசைகளைக் குறைத்து பிறருக்கு உதவும் மனப்பான்மையை ஓங்கச்செய்கின்ற மாதம் ரமலான். தான் ஈட்டிய செல்வத்தில் இரண்டரை சதவீதத்தை ஏழைகளுக்கு பகிர்ந்து வழங்கிட வழிகாட்டும் மாதம் ரமலான். ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஓர் இரவை தன்னுள் பொதிந்து வைத்து கணக்கின்றி நற்பாக்கியங்களை பொழிகின்ற மாதம் ரமலான்.

எல்லா பாக்கியங்களும் பூத்து குலுங்கிடும் இந்த ரமலான் மாதத்தில் இறைவன் ஏவிய அனைத்து நற்செயல்களையும் தொய்வின்றி நிறைவேற்றி, நாம் வாழும் காலமெல்லாம் இந்த சங்கைமிகும் ரமலானை பெறுகின்ற பெரும் பேற்றினை அடைய இறைவன் பேரருள் பாலிப்பானாக, ஆமின்.

மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம். 

மேலும் செய்திகள்