தசாவதாரமும்.. நோக்கமும்..

மனித வாழ்வின் நியதிகளை பேணும் பொருட்டு, தெய்வங்கள் நம்மில் ஒருவராக அவதாரமெடுத்து நமக்கு வரும் துன்பங்களை தீர்த்து வைப்பதாக புராணங்களும் இதிகாசங்களும் தெரிவிக்கின்றன.

Update: 2018-07-04 07:29 GMT
மனிதகுலத்தின் மேம்பாட்டுக்காக எடுத்த அவதாரங்களுள் காக்கும் கடவுளான விஷ்ணுவின் ‘தசாவதாரம்’ எனப்படும் பத்து அவதாரங்களே வெகு சிறப்பாக கருதப்படுகிறது.

‘பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தா பநார்தாய ஸம்பவாமி யுகே யுகே’

அதாவது ‘நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலைநாட்டவும், நான் யுகந்தோறும் பிறக்கிறேன்’ என்று பகவத் கீதையில் கண்ணன் கூறுகிறார்.

நீதியும், நேர்மையும் அழிந்து.. தீமைகள் பெருகி உலகமே அழிந்து போகும் நிலையான ஒவ்வொரு யுகங்களின் முடிவிலும், நீதியை நிலைநாட்டும் பொருட்டு ஒவ்வொரு அவதாரத்தையும் அவர் எடுத்துள்ளதாக ஐதீகம். அந்த அவதாரங்களின் நோக்கம் மற்றும் சிறப்புகளை சுருக்கமாக இங்கே காண்போம்.

மச்ச அவதாரம்

தசாவதாரத்தின் முதல் அவதாரம் இது. ஒரு யுகத்தின் முடிவான பிரளய காலத்தில், பிரம்மன் தவத்தில் ஆழ்ந் திருந்தார். அப்போது அவரிடம் இருந்த படைப்புத் தொழிலுக்கும், உயிர்களின் உன்னத வாழ்விற்கும் அடிப்படையான நான்கு வேதங்களையும் மது, கைடபர் எனும் அசுரகுணம் கொண்டவர்கள் திருடிச் சென்றனர். உலகத்தை தங்கள் வசம் அடக்கும் பேராசையுடன் வேதங்களை திருடிய அவர்கள், அதைக் கடலில் ஒளித்து வைத்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, திருமால் மச்ச (மீன்) அவதாரமெடுத்து கடலில் நீந்திச் சென்று, அசுரர்களை அழித்து வேதங்களை மீட்டார். பின்னர் வேதங்களை சுவாயம்புவ மனுவுக்கு உபதேசித்து, அவரைப் பிரளயத்திலிருந்து காப்பாற்றியதாக வரலாறு. உயிர்களின் ஆதாரம் நீர் என்பதை உணர்த்தவே பெருமாளின் முதல் அவதாரம் நீரில் வாழும் உயிராக நிகழ்ந்தது.

கூர்ம அவதாரம்

காலம் காலமாக நன்மைக்கும் தீமைக்கும் இடையில் யார் பெரியவர் எனும் போட்டிகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. அநீதியை வென்று தர்மமே நிலைக்கும் என்பதை உலகத்தாருக்கு உணர்த்த அந்த தேவலோகத்திலும் இப்போட்டிகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அவ் வகையில் புராணங்களிலும் இதிகாசங்களிலும் பெருமளவில் பேசப்பட்ட நிகழ்வு இது. இறைவன் துயிலும் பாற்கடலில் நிறைந்திருக்கும் இறவா வரம் தரும் அமுதத்தை பெற தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் கடும்போட்டி நிலவியது. பாற்கடலைக் கடைவதற்கு மகாமேருவான மந்தாரமலையும், பலம் பொருந்திய நாகமாகிய வாசுகியும் களமிறங்கின. மந்தார மலை கடலைக் கடையும் மத்தாகவும் வாசுகி கயிறாகவும் மாறினர். மலையைத் தாங்கும் வலிமை கொண்ட பெருமாள், மந்தார மலை நிலையாக நிற்க அதைத் தாங்கும் கூர்மம் (ஆமை) அவதாரம் எடுத்து அவர்களுக்கு உதவியதாக புராணம் சொல்கிறது.

வராக அவதாரம்


தசாவதாரத்தின் மூன்றாம் அவதாரம் இது. பன்றியின் வடிவம் கொண்டது. உயிர்களில் உயர்வு தாழ்வு எதுவும் இல்லை என்பதை உலகுக்கு உணர்த்த இறைவன் எடுத்த அவதாரம் இது. ஒரு பிரளயகாலத்தில் தன் அசுர சக்தியை பிரயோகித்து பூமியை பாய் போல் சுருட்டி, கடலின் அடியில் மறைத்து வைத்தார் இரண்யாட்சன். மகாவிஷ்ணு.. வராக அவதாரம் எடுத்து, அசுரனை அழித்து பூமியை தன் கொம்புகளால் ஏந்தி வந்ததாக வரலாறு.

அசுரனின் கொடுமைகளைத் தாங்காமல் பூமிமாதா கடலுக்குள் அழுந்தியதாகவும் அசுரனை அழித்து பழையபடி பூமியை நிலை நிறுத்த வராகம் உதவியதாகவும் மற்றொரு கதையும் உண்டு.

நரசிம்ம அவதாரம்

தசாவதாரத்தில் நினைத்ததும் வந்து காப்பாற்றும் கடவுளாக, விளங்குபவர் நரசிம்மர். வராக அவதாரத்தில் விஷ்ணு வதம் செய்த இரண்யாட்சனின் சகோதரன் இரண்யகசிபு. இவர் விஷ்ணுவை வெறுத்து தானே கடவுள் என்று கூறிக்கொண்டான். ஆனால் இரண்யனின் மகனான பிரகலாதன், நாராயணரின் மீதும் பக்தி கொண்டவனாக இருந்தான். இதனால் மகன் என்றும் பாராமல் அவனைக் கொல்ல முயன்றபோது, நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்தார். பக்தன் நம்பிக்கையுடன் சரணடைந்தால், இறைவன் எந்த உருவெடுத்தும் வருவார் என்பதைக் காட்டிய அவதாரம் இது.

வாமன அவதாரம்

தசாவதாரத்தில் ஐந்தாவது வாமன அவதாரம். பிரகலாதனின் வழித்தோன்றலான மகாபலி எனும் அசுர அரசன், தேவலோகத்தையும் பூலோகத்தையும் வெற்றிகொண்டு தேவேந்திர பதவியையும் அடைந்தான். இவனுக்குப் பயந்த இந்திரன் முதலிய தேவர்கள், மகாபலி வரமுடியாத இடத்தில் போய் மறைந்து வாழ்ந்தனர். மகாபலியின் புகழ் ஓங்குவது கண்ட இந்திரன் முதலானவர்கள், தாங்கள் இழந்த பதவியை மீண்டும் பெற உதவுமாறு விஷ்ணுவிடம் வேண்டினர். இதையடுத்து திருமால், குள்ளமான உருவம் கொண்டு மகாபலியிடம் மூன்று அடி மண் கேட்டார். முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்தவர், மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனை பாதாளத்தில் தள்ளி முக்தி அருளியதாக புராணம் சொல்கிறது.

பரசுராமர்

தசாவதாரத்தின் ஆறாவது அவதாரம் பரசுராமர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உலகமக்களுக்கு நிரூபித்தவர். ஜமதக்னி எனும் தவசீலருக்கும் ரேணுகாதேவிக்கும் கடைசி புத்திரனாக அவ தரித்தவர். ஒரு நாள் ரேணுகாதேவி ஒரு கந்தர்வனின் அழகில் மயங்கி, தன் கணவனுக்கு செய்யும் பூஜையில் தவறினாள். இதனால் அவளது தலையை வெட்டும்படி ஜமதக்னி, தன் மகன்களை அழைத்து கூறினார். அவர்கள் தயங்கினர். இதனால் கடைசி மகனான பரசுராமரை அழைத்து, தாய் மற்றும் சகோதரர்களின் தலையை வெட்டச் சொன்னார். அவரும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் ஜமதக்னி என்ன வரம் வேண்டும் என்று கேட்க, ‘தாயையும், சகோதரர்களையும் மீட்டுத் தாருங்கள்’ என்று வேண்டினார். மற்றொரு முறை தன் தந்தையைக் கொன்ற சத்திரியர்களின் வம்சத்தையே அழித்தொழித்தார்.

ராமபிரான்

ராமர் அவதாரமே தசாவதாரத்தின் ஏழாம் அவதாரமாகும். ஒருவனுக்கு ஒருத்தி எனும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தவும், பெற்றவர்களின் சொல் கேட்டு நடந்து சகோதர்களுடன் ஆன உறவை மேன்மை செய்யவும், அநியாயம் புரிபவரை அழிக்கும் வீரனாகவும், இன்னும் மனிதருக்கான பல வாழ்வியல் நெறிகளை அதன்படி வாழ்ந்து காட்டிய அவதாரம் இது. ராவணன், சீதையைக் கவர்ந்து சென்றான். தன் மனைவியை மீட்க வானரங்களோடு சேர்ந்து ராவணனுடன் போரிட்டு அவனை அழித்தார் ராமபிரான்.

பலராமர்

விஷ்ணுவின் எட்டாம் அவதாரம், பலராமன். விஷ்ணுவின் அம்சமான ஆதிசேஷனே இரண்டாகப் பிரிந்து பலராமனாகவும், கிருஷ்ணராகவும் தோன்றியதாக சில கருத்துகள் உள்ளன. பலராமர் கண்ணனின் சகோதரர் என்பதற்கே அதிக ஆதாரங்கள் உண்டு. இப்படி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. வசுதேவருக்கும் அவரின் முதல் மனைவியான ரோகினிதேவிக்கும் பிறந்தவரே பலராமன். தம்பியான கண்ணனுக்கு பலவிதங்களில் உதவி செய்து தன் தாய் தந்தையரையும் மக்களையும் இம்சித்து வந்த கம்சனை அழித்ததில் இவருக்கும் முக்கியப் பங்குண்டு. இவரின் தோளில் எந்நேரமும் வீற்றிருக்கும் கலப்பை, உலகின் ஆதாரமான விவசாயத்தின் முக்கியத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கிறது.

கிருஷ்ணர்

விஷ்ணுவின் ஒன்பதாம் அவதாரமான கண்ணன், பாலகனாக பல லீலைகள் புரிந்தவர். கம்சன் எனும் கொடுங்கோலனை வதம் செய்தவர். பின் கிருஷ்ணனாக நீதிக்கும் அநீதிக்கும் நடந்த போரில் நீதியின் பக்கம் நின்று குருசேத்திரப் போர் நடக்க உதவியவர். பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்குமான அந்த யுத்தத்தில், பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனின் சாரதியாக இருந்து, அவனுக்கு பகவத் கீதையை போதித்தவர். அநீதியை சூழ்ச்சியால் முறியடிப்பது தீமையாகாது என்பதை உணர்த்திய அவதாரமே கிருஷ்ணாவதாரம்.

கல்கி

உலகில் நன்மைகள் குறைந்து, தீமைகள் கட்டுக்குள் அடங்காமல் போகும்போது, இறைவன் தோன்றி தீமைகளை அழித்து புதுயுகத்தைப் படைப்பார் என்பது இந்து சமயத்தின் நம்பிக்கை. அதன்படி தற்போது நடைபெறும் கலியுகத்தின் முடிவில் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் நிகழும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. உலகில் தீமைகள் தலைவிரித்தாடும் போது விஷ்ணுவின் தீவிர பக்தனுக்கு மகனாக பிறப்பார் கல்கி என்கிறது பாகவதம். 

- சேலம் சுபா

மேலும் செய்திகள்