அர்ச்சுனனுக்கு உண்டான சந்தேகம்

அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு, பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் ‘பகவத் கீதை’ என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது.

Update: 2018-08-30 10:23 GMT
 பகவான் அந்த கீதையை உபதேசித்தது பற்றியே ஒரு சந்தேகத்தை எழுப்பினான் அர்ச்சுனன். அவனுக்குள் எழுந்த சந்தேகம் இது தான்.

“கிருஷ்ணர், மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை அருளியிருக்கிறார். நுட்பமான அரிய பல உண்மைகளை எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்? பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால், அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம். ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே, அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார்? அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும் கூட. பூஜை நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இப்படி சிறந்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு, என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக எப்படி கிருஷ்ணர் தேர்ந்தெடுத்தார்?” என்பதுதான் அர்ச்சுனன் மனதில் உதித்த சந்தேகம்.

தன் சந்தேகத்தை கிருஷ்ணரிடமே சென்று கேட்டான், அர்ச்சுனன். அதற்கு கிருஷ்ணன் பதிலளிக்கத் தொடங்கினார்.

“அர்ச்சுனா! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என்னிடம் தோழமை கொண்டவன் என்பதால் நான் உனக்கு கீதையை உபதேசிக்கவில்லை. நீ நினைப் பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்தும் உணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருத முடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கவுரவர்கள் அதர்மம் புரி கிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசீர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.

தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. அவர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.

ஆனால் நீ, அவர்களைப் போன்றவனல்ல, மாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட, நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. இப்போதும் கூட, உன்னைவிட வயதிலும், அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து, அவர்களுக்காக என்னிடம் வாதிட்டுக் கொண்டிருக்கிறாய்.

களத்திலே நின்றபோதும் ‘உற்றார், உறவினர், மதிப்பிற்குரிய பெரியோர் களையெல்லாம் எப்படிக் கொல்வது? இந்த யுத்தமும் இழப்பும் தேவைதானா?’ என்றெல்லாம் நீ யோசித்தாய். ‘அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும்’ என்று கலங்கினாய். ‘பிச்சை எடுத்து வாழவும் நான் தயார்’ என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல.

பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க முன்பு நீ நினைத்திருந்தாய் என்றாலும், களத்தில் நின்றபோது அவர்களை மன்னித்து, ‘போரிட வேண்டாம்’ என்று சொல்லும் உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது? அநீதி எது? என்று சிந்திக்கிறவனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு.

நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; உன்னிடம் இருந்த தனிச் சிறப்புதான் காரணம்” என்றார் கிருஷ்ணன்.

அர்ச்சுனன் அப்போதும்கூட அகந்தை எதுவுமற்றவனாய், அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான். 

மேலும் செய்திகள்