புராண கதாபாத்திரங்கள்

.;

Update:2018-11-27 17:26 IST
புராண கதாபாத்திரங்கள்
கோவர்த்தனம்

ஒரு முறை கோகுலத்து மக்களின் மீது கோபம் கொண்ட இந்திரன், இடி- மின்னலுடன் பெரும் மழையைப் பொழியச் செய்தான். இதனால் கோகுல மக்கள் அனைவரும் மிகவும் துன்பம் அடைந்தனர். இதையடுத்து மக்கள் அனைவரும் கிருஷ்ணரிடம் வேண்ட, சிறு பாலகனான கிருஷ்ணர், கோவர்த்தன மலையை தூக்கி, தன் சுண்டு விரலால் தாங்கி குடையாகப் பிடித்தார். அதன் அடியில் கோகுல மக்களும், ஜீவராசிகளும் தங்கி இன்புற்றனர்.

கருடன்

மகா விஷ்ணுவின் முதன்மை வாகனமாக உள்ளவர் கருடன். இவர் காசியப முனிவருக்கும் வினதை என்பவருக்கும் பிறந்தவர். இவர் பிறக்கும் போது இவரின் இறக்கைகள் பிரகாசமாக மின்னியது. இதனால் இவரை அக்னி தேவரின் அவதாரமாக நினைத்தனர். நாகதேவர்களின் தாயான கத்ருவிடம் அடிமையாக இருந்த தன் தாயை மீட்பதற்காக, தேவலோகம் சென்று அமிர்தத்தைக் கொண்டு வர முடிவு செய்தார். அமிர்தத்தை மீட்க வேண்டுமானால் தேவர்களுடன் போர்புரிய வேண்டியதிருந்தது. இந்திரன் முதலான தேவர்களுடன் போரிட்டு வென்று, அமிர்தம் கொண்டு வந்து தாயை மீட்டார். இருப்பினும் அந்த அமிர்தத்தை நாகர்கள் சாப்பிட முடியாதபடி, மீண்டும் தேவர்களிடமே கொண்டுபோய் சேர்த்தார். இதனால் மகாவிஷ்ணுவின் அன்பைப் பெற்றார். அவருக்கு வாகனமாக இருக்கும் பெரும்பேற்றை அடைந்தார்.

கந்தகர்னன்

கந்தகர்னன் ஒரு அசுரன். இந்த அசுரன் மகா விஷ்ணுவின் திருநாமத்தை கேட்டவுடன் கோபம் கொள்பவனாக இருந்தான். அவரின் திருநாமம் கேட்காதிருக்க, தன்னுடைய காதுகளில் மணியைக் கட்டி வைத்திருந்தான். அவன் குபேரனின் அடிமையாக இருந்தான். அதிலிருந்து விடுபட சிவபெருமானை வேண்டினான். அவன் முன்பாக தோன்றிய சிவபெருமான், ‘என்னை வணங்குவதைக் காட்டிலும் விஷ்ணுவை வணங்குவதே இதற்கு பலன் ஆகும்’ என்றார். இதனால் கந்தகர்னன், தன்னுடைய காதுகளில் இருந்த மணியை கழட்டி விட்டு, விஷ்ணுவை வணங்கி அடிமையில் இருந்து மீண்டான்.

கடோத்கஜன்

பீமனுக்கும் அரக்கி இடும்பிக்கும் மகனாக பிறந்தவன் தான் இந்த கடோத்கஜன். அதீத மந்திர சக்தியையும், பறப்பது போன்ற பல சக்திகளையும் தன்னகத்தே கொண்டிருந்தான். குருசேத்திரப் போரில் கடோத்கஜனின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. போரில் கவுரவர்களின் படைகள் பல, கடோத்கஜனால் வீழ்த்தப்பட்டன. கர்ணன் தனது பகைவனான அர்ச்சுனனை அழிப்பதற்கு இந்திராஷ்டத்தை உபயோகித்தான். கடோத்கஜன் இறப்பதற்கும், அர்ச்சுனன் பிழைத்ததற்கும் இதுவே கரணமாகிப் போனது. இது போரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

காண்டீபம்

அர்ச்சுனனின் வில் ‘காண்டீபம்’ என்று அழைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேரை கொல்லக் கூடிய சக்தி மிக்க இந்த ஆயுதம், பிரம்மனால் உருவாக்கப்பட்டது. இது தேவர்கள் மற்றும் கந்தர்வர்களால் தவமிருந்து பெறப்பட்டது. காந்தவ வனத்தை காப்பதற்கு வாக்கு அளித்த அர்ச்சுனனுக்கு உதவுவதற்காக காண்டீபத்தை, அர்ச்சுனனுக்கு அவர்கள் வழங்கினார்கள். இந்த காண்டீபத்தைப் பயன்படுத்தி பல போர்களை அர்ச்சுனன் வென்றான். காண்டீபம் என்ற வில்லை வைத்திருந்த காரணத்தால் அவன் ‘காண்டீபன்’ என்றும் அழைக்கப்பட்டான்.

மேலும் செய்திகள்