உலகம் போற்றும் உத்தம நபி

இன்றைய சவுதி அரேபியாவிலுள்ள மக்கா நகர். பாலைவன நகரமான அங்கு குளிர்ச்சியூட்டும் நிலவாய் வந்துதித்தவர்கள் தான் நமது நபிகள் நாயகமான முகம்மது நபி (ஸல்) அவர்கள்.

Update: 2019-02-22 02:00 GMT
அந்தக்காலத்து மக்கா நகர் மக்கள் கல்வியறிவு இல்லாத நாடோடிகள். சிலவேளை கடலோடிகள். நல்லொழுக்கம், நல்ல பழக்கம் என்பதெல்லாம் அவர்கள் அறவே கேள்விப்படாத ஒன்று. கூடவே இறைவனுக்கு இணையாக சிலை வணக்கமும், இடை விடாத குடிப்பழக்கமும் அவர்களிடம் இருந்தது.

இந்நிலையில் தான் அந்நிலத்தில் அப்துல்லா, ஆமினா தம்பதியருக்கு அருந்தவப் புதல்வராய் பிறந்தார் அவர். இதுவரை அகிலத்தில் எங்குமே, யாருக்குமே சூட்டப்படாத ஒரு பேரற்புதமான பெயரை அப்பாலகனுக்கு அவரது பாட்டனார் அப்துல் முத்தலிப் சூட்டினார். அது தான் “முஹம்மது” என்ற முத்தான பெயர். இதற்கு புகழப்பட்டவர், புகழுக்குரியவர், புகழப்படுபவர் என முக்காலத்திற்கும் பொருந்தும்படியான முழுமையான முப்பொருளுண்டு.

பிறக்கும் போதே தந்தையை இழந்தவர். பிறந்தபின் தாயை இழந்தவர். ஆனாலும் ஒழுக்கக் கேடுகள் மட்டுமே குடியிருந்த அவ்வூரில் ‘அல்அமீன்’ (நம்பிக்கைக்குரியவர்), ‘அஸ்ஸாதிக்’ (உண்மைக்குரியவர்) என்று அனைவராலும் அன்போடு அவர் போற்றப்பட்டார்.

அவரது வாலிபப்பருவம் சற்றும் வழிதவறிச் செல்லவில்லை. அந்த வாலிப வயதில் “ஹில்புல் புளூல்” என்ற வாலிபர் சங்கத்தை ஏற்படுத்தி அவர் பொதுசேவை செய்து வந்தார். பசித்தவர்களுக்கு உணவளிப்பது, வழி தவறியவர்களுக்கு வழிகாட்டுவது, வறுமையில் வாடுவோருக்கு உதவிசெய்வது, துன்பப்படுவோரின் துன்பங்களை களைவது... என அச்சங்கத்தின் மூலம் நல்ல பல காரியங்களை செவ்வனே செய்து வந்தார்கள்.

மக்கத்துச் செல்வச் சீமாட்டி கதீஜா அம்மையாரின் வணிகப் பொருட்களை சிரியா தேசத்திற்கு கொண்டு சென்று மிகச்சரியாக விற்றுக்கொண்டு வர மிகத் தகுதியானவர் இந்த முகம்மது தான் என அவரது இருபதாம் வயதில் இனிதே தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவ்வாறே அப்பயணத்தின் இறுதியில் இருமடங்கு லாபத்தை பேரதிகமாய் பெற்றுத்தந்தவர். நிறைவாக 40 வயது விதவைப்பெண் கதீஜாவையே தமது 25-ம் வயதில் திருமணம் முடித்தார்.

நபியவர்கள் தமது நாற்பதாம் வயதை அடைந்த போது அவருக்கு ‘வஹீ’ எனும் இறையறிவிப்பு ஏக இறைவனான அல்லாஹ்விடம் இருந்து வரத்தொடங்கிற்று.

அந்த வசனம்: ‘ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு’ (திருக்குர்ஆன் 96:1).

அன்று தொடங்கி இருபத்து மூன்று வருடகால வரலாற்றில் காலச்சூழலுக்கேற்ப சுமார் 6600 இறை வசனங்கள் இறக்கியருளப் பெற்றன. இந்த இறைவசனங்களின் தொகுப்பு தான் ‘திருக்குர்ஆன்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும், சட்டங்களும், திட்டங்களும் பரிபூரணமாகவே இருக்கின்றன.

நபிகளாரின் சொல், செயல், உடை, நடை, பாவனை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என அனைத்திலும் நபிகளார் அழகான, அற்புதமான ஒழுங்கு முறையை கடைப்பிடித்தார்கள்.

இதனால் தான் நபிகளாரைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்: ‘அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது’. (திருக்குர்ஆன் 33:21)

திருக்குர்ஆன் தௌிவானது, அறிவுப்பூர்வமானது, ஆதாரப்பூர்வமானதும் கூட. அதைப்போன்றே அண்ணலாரின் வாழ்வும், வாக்கும் அப்படியே அழகானது; அறிவுப்பூர்வமானது. மேலும் அது ஆதாரப்பூர்வமானது. அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமேயில்லை.

ஒருமுறை நபிகளார் ஒரு சபைக்கு வந்திருந்த போது பரட்டைத்தலையுடன் ஒருவர் இருந்ததையும், இன்னொருவர்அழுக்கடைந்த ஆடையுடன் இருந்ததையும் பார்த்து ‘ஏன் இவர்கள் இப்படியிருக்கிறார்கள்? அவற்றை நன்கு கவனிக்க வேண்டாமா?’ என்று கடிந்து கொண்டார்கள்.

“ஆள்பாதி ஆடைபாதி” என்பது நாம் நன்கறிந்ந அனுபவமொழி. இந்த ஆடை விஷயத்தில் அண்ணலார் எப்படி தமக்கென ஓர் ஒழுங்குமுறையை கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள் என்றறிய முடிகிறது. இப்படிப்பட்ட ஓர் அழகியலைத்தான் நாம் ஆளுமைப்பண்பு என்கிறோம்.

அதனால் தான் நபித்தோழர் ஒருவரின் தலைமுடி கலைந்திருந்த போது “அதை அவர் ஏன் சரிசெய்யக் கூடாது? அவரது தலையில் ஏதும் (காயம் போன்றவை) ஏற்பட்டிருக்கிறதா?” என்றும் விசாரிக்கிறார்கள் என்றால் நபிகளாரின் ‘கூர்பார்வை’ எந்தளவுக்கு இருந்திருக்கிறது என்பதையும் அறியமுடிகிறது.

இன்னொரு தோழரிடம், அவரது ஆடை ஏன் அழுக்காக, அசிங்கமாக இருக்கிறது. அதை அவர் (தண்ணீரில்) அலசி இருக்க வேண்டாமா? என்றும் கூறினார்கள் நபியவர்கள்.

‘அல்லாஹ் அழகானவன், அவன் அழகையே விரும்புகிறான்’ என்ற நபிமொழி நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடக்கூடிய ஒன்றா? அழகை யார்தான் வெறுப்பார்கள்? மற்றவர்களிடம், மற்றவைகளிடம் அதீத அழகை எதிர்பார்க்கிற நாம், நம்மை மட்டும் அலங்கரித்துக்கொள்ளாதது ஏன்?

அது ஒரு ஆளுமை, அதை நாம் தான் நமக்குள் கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் அது நமக்குத் தான் சிரமம். இதற்கும் கூட நபிகளார் அழகிய முன்மாதிரியாக இருந்து நமக்கு வழிகாட்டுகிறார்கள் என்றால் அது மிகுந்த கவனத்திற்குரியது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் தம் வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் அழகிய முன்னுதாரணமான தீர்க்கதரிசியாய் வாழ்ந்து காட்டியது மட்டும் அதிசயமல்ல, நாடுகள் பலவும் போற்றும் நல்லதொரு மனிதராகவும் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் என்பது தான் பேரதிசயம்.

 - மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

மேலும் செய்திகள்