மாங்கல்ய பலம் தரும் வரலட்சுமி நோன்பு

முன்காலத்தில் மகத நாட்டில் இருந்த ஒரு ஊர், குஞ்சினாபுரம். இங்கு சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தாள்.

Update: 2021-08-17 17:32 GMT
அவள் மிகவும் பக்தி நிறைந்தவளாக இருந்தாள். கடவுளர்களை வணங்கி வந்ததோடு, தன்னுடைய கணவன் மற்றும் கணவனைப் பெற்றவர்களையும் கடவுளர்களாகவே நினைத்து பணிவிடை செய்தாள். சாருமதியின் நடவடிக்கை, மகாலட்சுமி தாயாருக்கு மகிழ்ச்சியை அளித்தது. இதையடுத்து சாருமதியின் கனவில் ‘வரலட்சுமி’ தாயாராக தோன்றி அருள்புரிந்தார்.

மேலும் அன்னையானவள், சாருமதியிடம் “என்னை வணங்கி வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வாசம் செய்வேன்’ என்று அருளாசி வழங்கியதுடன், சாருமதிக்கு ‘வரலட்சுமி நோன்பு’ இருபதற்கான வழிமுறைகளைக் கூறினார். அதோடு அந்த விரத முறைகளை மற்றவர்களுக்கும் எடுத்துரைக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்படியே செய்தாள் சாருமதி. அவள் பெற்ற நன்மைகளை கண்ட பெண்கள், தாங்களும் மகாலட்சுமிக்காக விரதம் இருக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அந்த நாட்டு மக்கள் முழுவதும் விரதம் இருக்கத் தொடங்கினர். நாடு சுபீட்சம் அடைந்தது.

வீட்டின் பூஜை அறையில் கோலம் போட்டு, லட்சுமி தாயார் படத்தை வைக்க வேண்டும். அதற்கு மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். சிலர் தங்கள் வீடுகளில் வெள்ளி அல்லது தங்கத்தில் லட்சுமி உருவத்தை வைத்திருப்பார்கள். அவர்கள் கலசத்தின்மேல் தேங்காய் வைத்து பட்டுத்துணி, பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கலசத்தின் உள்ளே நீர்விட்டு ஏலக்காய், பச்சை கற்பூரம், வாசனாதி திரவியங்களை சேர்க்க வேண்டும். வசதிக்கேற்ப அப்பம், வடை, பொங்கல், கேசரி போன்ற நைவேத்தியங்கள் படைத்து, கும்பத்தில் மஞ்சள் நோன்பு கயிறுகள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

பூஜைக்கு அருகில் உள்ள சுமங்கலி பெண்கள், பெண் பிள்ளைகளை அழைக்கலாம். பூஜையில் கலந்துகொள்ளும் அனைவரும் லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலாவல்லி மாலை, லலிதா சகஸ்ரநாமம் போன்றவற்றை பாராயணம் செய்ய வேண்டும். இறுதியில் தீபம் காட்டி பெண்களுக்கு நோன்பு கயிறு, தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரிக்க வேண்டும். நைவேத்தியங்களையும் பிரசாதமாக வழங்கலாம். இப்படி பக்தியுடன் வழிபாடு செய்யும் போது, ஆயுள், ஆரோக்கியம், மாங்கல்ய பலம் பெருகும். கன்னிப் பெண் களுக்கு திருமண வரம் கிடைக்கும்.

மேலும் செய்திகள்