எனது மனதிற்கு நெருக்கமான நாகை மண்ணில் இருந்து... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025

எனது மனதிற்கு நெருக்கமான நாகை மண்ணில் இருந்து பேசுகிறேன் - தொண்டர்கள் மத்தியில் விஜய் 

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது முதல்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கிய அவர் இன்று (சனிக்கிழமை) நாகையில் 2-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் நாகை பிரசாரத்திற்காக இன்று காலை சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து நாகை மற்றும் திருவாரூரில் சாலை மார்கமாக சென்று பிரசாரம் செய்வதற்காக தனது பிரசார வாகனத்தில் புறப்பட்டார். இந்த சூழலில் வாஞ்சி ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளில் தவெக தொண்டர்கள் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்திருந்தனர். இதன்படி மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நாகூர், நாகை கலெக்டர் அலுவலகம், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் வழியாக கிழக்கு கடற்கரை சாலை சென்று அங்கிருந்து புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதிக்கு சென்றார் விஜய்.

அங்கு நடந்த பரப்புரையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், “எனது மனதிற்கு நெருக்கமான நாகை மண்ணில் இருந்து பேசுகிறேன். நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசி பெற்ற மண்; மீனவ நண்பனாக வந்துள்ளேன்.. இன்று நேற்று அல்ல 14 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணுக்கு நான் வந்துள்ளேன். மத சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நாகை மக்களுக்கு வணக்கம்.

கப்பலில் இருந்து வந்திறங்கும் பொருட்களை விற்க, அந்தக் காலத்தில் நாகையில் அந்திக்கடைகள் இருக்கும் என கேள்விபட்டுள்ளேன். மீன்பிடி தொழில், விவசாயம் என எல்லா பக்கமும் உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் இந்த நாகப்பட்டினம். மதவேறுபாடு இல்லாத, அனைவருக்கும் பிடித்துபோன, மதச்சார்புகளற்று வாழும் மக்கள் நாகை மக்கள்.

மீனவர்களுக்காக நான் குரல் கொடுப்பது புதிதல்ல. நான் என்றும் மக்களோடு, மக்களாக நிற்பேன். நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள், இலங்கையில் இருந்தாலும் அல்லது உலகின் எந்த மூலையில் இருந்தாலும்... தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும், நிற்பதும் நம் கடமை, உரிமை மீனவர்களின் உயிர் எந்தளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு ஈழத்தமிழர்களின் கனவுகளும், உரிமையும் முக்கியம்

தமிழ்நாட்டின் மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்திலிருப்பது நாகை துறைமுகம்தான். ஆனால் இங்கு நவீன வசதிகளுடன் கூடிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள்கூட இங்கு இல்லை. அதிகப்படியான குடிசை வீடுகள் இங்கு இருக்கிறது. 'இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் எங்கள் ஆட்சிதான் சாட்சி' என அடுக்குமொழியில் பேசுவோரை கேட்டு கேட்டு, நம் காதில் இருந்து ரத்தம் வந்ததுதான் மிச்சம்” என்று அவர் கூறினார்.

Update: 2025-09-20 08:18 GMT

Linked news