குஜராத் விமான விபத்து வேதனை அளிக்கிறது - இங்கிலாந்து பிரதமர்
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.
விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் என ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விபத்து குறித்து இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“இங்கிலாந்து நாட்டவர்கள் பலரை ஏற்றிக்கொண்டு லண்டனுக்கு புறப்பட்ட விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளாகும் காட்சிகள் வேதனை அளிக்கின்றன. அங்குள்ள நிலைமை குறித்து எனக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.