குஜராத் விமான விபத்து; 204 பேர் உயிரிழந்ததாக தகவல்

விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update:2025-06-12 14:20 IST

காந்திநகர்,

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

விபத்து பற்றி ஏர் இந்தியா வெளியிட்ட செய்தியில், அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கல் நாட்டினர் என்றும் தெரிவித்துள்ளது. இன்று இரவு 8 மணி நிலவரப்படி, 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

Live Updates
2025-06-12 14:29 GMT

குஜராத் விமான விபத்து: அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இரங்கல்

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த துயரமான விமான விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு மனமுடைந்துவிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

“இந்த கோரமான சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். தொடர்ந்து நிலைமையை கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அவசரகால மீட்பு குழுவினருடன் துணை நிற்கிறோம்” என மார்கோ ரூபியோ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2025-06-12 14:20 GMT

‘ஏர் இந்தியா’ விமான விபத்தில் பயணி ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக குஜராத் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அவர் அவரது பெயர் அஜய் குமார் ரமேஷ் என்றும், அவர் விமானத்தின் இருக்கை எண் 11-Aல் இருந்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

2025-06-12 14:00 GMT

அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் டாடா நிறுவனம் ஏற்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.

2025-06-12 13:10 GMT

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மதியம் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு காரணமாக அருகில் உள்ள மருத்துவர்கள் விடுதியில் விழுந்து வெடித்து சிதறிய விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

இந்த நேரத்தில், இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த பயணிகள் விமான விபத்துகள் பற்றி பார்ப்போம்.

விரிவாக படிக்க; =>  இந்தியாவில் இதுவரை நடந்த பயணிகள் விமான விபத்துகள்  

2025-06-12 12:57 GMT

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் போயிங் 787-8 டிரீம்லைனர் விமானம் இன்று விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை வெளியான தகவலின்படி, இந்த கோர விபத்தில் 204 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விழுந்த பகுதியில் மருத்துவ கல்லூரி மாணவர்களின் விடுதி அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த விபத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை செயலாளர் தனஞ்செய் திவேதி தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண, உறவினர்களின் டி.என்.ஏ.வை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2025-06-12 12:37 GMT

விமான விபத்து: மீட்பு பணியில் 130 ராணுவ வீரர்கள்

இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவுவதற்காக சுமார் 130 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவ குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. குப்பைகளை அகற்றுவதற்காக ஜேசிபி-களுடன் கூடிய பொறியியல் குழுக்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுக்கள், விரைவு நடவடிக்கை குழுக்கள், தீயை அணைக்கும் கருவிகள் மற்றும் தண்ணீர் டேங்கர்களுடன் கூடிய தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் கள மேலாண்மைக்கான பணியாளர்கள் ஆகியோர் இந்த குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். ராணுவ மருத்துவமனையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-06-12 12:30 GMT

விமானத்தில் இருந்த யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்

அகமதாபாத்தில் இருந்து இன்று மதியம் லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் டேக்ஆப் ஆன சில நிமிடங்களில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விமானத்தில் பயணித்த யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ஜி.எஸ்.மாலிக் கூறியிருக்கிறார்.

‘விபத்தில் யாரும் உயிர் பிழைத்ததாக தெரியவில்லை’ என ஏ.எஃப்.பி. செய்தியை மேற்கோள் காட்டி அவர் கூறியிருக்கிறார். சில அலுவலகங்கள் இருந்த குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்ததால் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன என்று அவர் கூறியிருக்கிறார்.

2025-06-12 12:27 GMT

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் போயிங் 787-8 டிரீம்லைனர் விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் என ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விமான விபத்தை தொடர்ந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் ‘எக்ஸ்’ வலைதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“விமான விபத்து தொடர்பாக ஏர் இந்தியாவுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம். விபத்தில் சிக்கிய பயணிகள், விமான பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-06-12 12:09 GMT

அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம் லைனர் விமானம் விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் பங்குகள் 7.2% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னதாக 2018 மற்றும் 2019-ல் நடந்த விபத்துகளின் போதும் போயிங் பங்குகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

2025-06-12 12:06 GMT

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.

தற்போது விபத்து நடந்த இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்து குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தை (AAIB) சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் அகமதாபாத் விரைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்