சென்னை, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன்... ... அன்புமணி - ராமதாஸ் தரப்பிடம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடத்திய விசாரணை நிறைவு

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, அவரை செயல் தலைவராக நியமித்ததோடு மட்டுமல்லாமல், இனிமேல் நான்தான் பாமகவுக்கு தலைவராக இருப்பேன் என்று ராமதாஸ் அறிவித்தார். ஆனால், பொதுக்குழு மூலம் கட்சியின் விதிகளின்படி தேர்வு செய்யப்பட்ட என்னை தலைவர் பதவியில் இருந்து யாராலும் நீக்க முடியாது என்று அன்புமணி கூறி வருகிறார். இரு தரப்பினரும் கட்சி நிர்வாகிகளை மாறி மாறி நீக்கியும், நியமித்தும் வருகின்றனர்.

அன்புமணி தலைமையிலான பாமக வரும் 9-ம் தேதி அன்று மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். அன்புமணி அழைப்பு விடுத்திருக்கும் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, கட்சியின் தலைவர் ராமதாஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரிடம் தனியாகப் பேச வேண்டியிருப்பதால், இருவரையும் தனது அறைக்கு நேரில் வருமாறு கூற முடியுமா என இரு தரப்பு வழக்கறிஞர்களிடமும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அன்புமணி தரப்பு வழக்கறிஞர் இதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, மாலை 5.30 மணிக்கு தனது அறைக்கு வருமாறு ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்தார். இந்தச் சந்திப்பின்போது, கட்சியினர், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் யாருக்கும் அனுமதி இல்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டுக்கு ராமதாஸ் நேரில் வரமாட்டார் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக வர இயலவில்லை என நீதிபதிக்கு கடிதம் அளிக்க ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் வி.எஸ்.கோபு கூறியுள்ளார்.

நீதிபதி கேட்டுக்கொண்டதன்படி, நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டிற்கு அன்புமணி கிளம்பியுள்ள நிலையில், ராமதாஸ் காணொலி வாயிலாக ஆஜராக விருப்பம் தெரிவித்து இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் தரப்பில் அனுப்பிய கடிதம் நீதிபதியிடம் தரப்படும் என்றும் வழக்கறிஞர் வி.எஸ்.கோபு தெரிவித்தார்.

Update: 2025-08-08 12:26 GMT

Linked news