அன்புமணி - ராமதாஸ் தரப்பிடம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடத்திய விசாரணை நிறைவு
அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் இன்று மாலை ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்து இருந்தார்.;
அன்புமணி அழைப்பு விடுத்த பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரிடம் தனியாக பேச வேண்டி உள்ளதால், இருவரையும் தன்னுடைய அறைக்கு நேரில் வர கூற முடியுமா என இரு தரப்பு வழக்கறிஞரிடமும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அன்புமணி தரப்பு வழக்கறிஞர் இதை ஏற்றுக் கொண்டார். ராமதாஸ் தரப்பில் காணொலி வாயிலக ஆஜராக அனுமதி கேட்கப்பட்டது. இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, அன்புமணி ராமதாஸ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேபோல ராமதாஸ் காணொலி வாயிலாக ஆஜராகியிருந்தார். இருவரிடமும் விசாரணை முடிந்த நிலையில், சற்று நேரத்தில் பொதுக்குழு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.
அன்புமணி நேரில் ஆஜரான நிலையில், காணொலி வாயிலாக ராமதாஸ் ஆஜராகியுள்ளார். ராமதாஸ் தரப்பின் விளக்கத்தை நீதிபதி கேட்டு வருகிறார்.
- அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடை கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உடன் அன்புமணி சந்திப்பு
- நாளை பாமக பொதுக்குழுவை நடத்துவது குறித்து, நீதிபதியை சந்தித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என அன்புமணி தரப்பு தகவல்
- பொதுக்குழு விவகாரம் குறித்து நேரில் சந்திக்க நீதிபதி அழைப்பு விடுத்த நிலையில் அன்புமணி சந்திப்பு
- நேரில் வர ஆவலுடன் இருந்தேன், உடல் நலக்குறைவு காரணமாக வர இயலவில்லை - ராமதாஸ் தரப்பில் கடிதம் சமர்ப்பிப்பு
அன்புமணியிடம் விசாரணை
பொதுக்குழு தொடர்பாக அன்புமணி தரப்பு வாதங்களை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேட்டறிந்து வருகிறார். அன்புமணியிடம் தனியாகவும் கருத்துக்களை நீதிபதி கேட்டறிந்தார்.
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, அவரை செயல் தலைவராக நியமித்ததோடு மட்டுமல்லாமல், இனிமேல் நான்தான் பாமகவுக்கு தலைவராக இருப்பேன் என்று ராமதாஸ் அறிவித்தார். ஆனால், பொதுக்குழு மூலம் கட்சியின் விதிகளின்படி தேர்வு செய்யப்பட்ட என்னை தலைவர் பதவியில் இருந்து யாராலும் நீக்க முடியாது என்று அன்புமணி கூறி வருகிறார். இரு தரப்பினரும் கட்சி நிர்வாகிகளை மாறி மாறி நீக்கியும், நியமித்தும் வருகின்றனர்.
அன்புமணி தலைமையிலான பாமக வரும் 9-ம் தேதி அன்று மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். அன்புமணி அழைப்பு விடுத்திருக்கும் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, கட்சியின் தலைவர் ராமதாஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரிடம் தனியாகப் பேச வேண்டியிருப்பதால், இருவரையும் தனது அறைக்கு நேரில் வருமாறு கூற முடியுமா என இரு தரப்பு வழக்கறிஞர்களிடமும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அன்புமணி தரப்பு வழக்கறிஞர் இதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, மாலை 5.30 மணிக்கு தனது அறைக்கு வருமாறு ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்தார். இந்தச் சந்திப்பின்போது, கட்சியினர், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் யாருக்கும் அனுமதி இல்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டுக்கு ராமதாஸ் நேரில் வரமாட்டார் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக வர இயலவில்லை என நீதிபதிக்கு கடிதம் அளிக்க ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் வி.எஸ்.கோபு கூறியுள்ளார்.
நீதிபதி கேட்டுக்கொண்டதன்படி, நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டிற்கு அன்புமணி கிளம்பியுள்ள நிலையில், ராமதாஸ் காணொலி வாயிலாக ஆஜராக விருப்பம் தெரிவித்து இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் தரப்பில் அனுப்பிய கடிதம் நீதிபதியிடம் தரப்படும் என்றும் வழக்கறிஞர் வி.எஸ்.கோபு தெரிவித்தார்.