மோடியுடன் பேசியது பெருமை அளிக்கிறது: விரைவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-04-2025
மோடியுடன் பேசியது பெருமை அளிக்கிறது: விரைவில் இந்தியாவுக்கு வருகிறேன்: எலான் மஸ்க்
கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அவரின் மூத்த ஆலோசகராக தொழிலதிபர் எலான் மஸ்க் செயல்படுகிறார். இதன்படி டிரம்ப் நிர்வாகத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக மஸ்க் கருதப்படுகிறார், மேலும் அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கும் கூட்டாட்சி பணியாளர்களைக் குறைப்பதற்கும் இலக்காகக் கொண்ட அரசாங்க செயல்திறன் துறையை (DOGE) முன்னெடுத்து வருகிறார்.
அமெரிக்காவில் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம், டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனம் என பல்வேறு முன்னணி நிறுவனங்களை எலான் மஸ்க் நடத்தி வருகிறார்.
இந்த சூழலில் இந்தியாவில் டெல்லி, மும்பை நகரங்களில் டெஸ்லா கார் நிறுவனத்தின் விற்பனையகங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன. மேலும் இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தி ஆலையை தொடங்கவும் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்டார்லிங்க் தொலைத்தொடர்பு சேவையை வழங்கவும் அவர் திட்டமிட்டு உள்ளார்.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியுடன், எலான் மஸ்க் நேற்று தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டனில் நாங்கள் சந்தித்துப் பேசினோம். அப்போது பேசிய விஷயங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தோம். தொழில்நுட்பம், புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதித்தோம். இந்தத் துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர ஆவலுடன் உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “"பிரதமர் மோடியுடன் பேசுவது ஒரு மரியாதை. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர நான் ஆவலுடன் உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.