ராஜஸ்தானில் எரிவாயு டேங்கர் லாரி விபத்து.. பலி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
ராஜஸ்தானில் எரிவாயு டேங்கர் லாரி விபத்து.. பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில், சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட டேங்கர் லாரி, மற்றொரு லாரி மீது மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. எரிவாயு கசிந்து டேங்கர் லாரி வெடித்து சிதறி தீப்பிடித்தது, அந்த லாரிக்கு அருகில் சென்ற பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 43 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே, முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.