உக்ரைனின் ரசாயன ஆலையில் 800 பேர் தஞ்சம்; தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷியா

கீவ்,

உக்ரைனில் 100 நாட்களை கடந்து ரஷியா மேற்கொண்டு வரும் போரானது உக்கிரமடைந்து உள்ளது. உக்ரைனில் சிவிரோடோனெட்ஸ்க் நகரை ரஷிய படைகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நகரில் உள்ள அசோட் என்ற பெயரிலான ரசாயன தொழிற்சாலையின் கீழ் பகுதியில், குண்டுவீச்சில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பொதுமக்களில் 800 பேர் வரை பதுங்கியுள்ளனர்.

இந்த சூழலில், சிவிரோடோனெட்ஸ்க் மண்டல கவர்னர் செர்கி கைடய் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி மக்களிடம் பேசும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்துள்ள சிவிரோடோனெட்ஸ்க் நகரில் உள்ள அசோட் ரசாயன ஆலை தொடர்ந்து உக்ரைனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

ரஷியாவால் அசோட் கைப்பற்றப்படவில்லை. அந்த ஆலைக்கு அடுத்துள்ள தெருக்களில் போரானது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.

ரஷிய படைகள் அவர்களுடைய அனைத்து முயற்சிகளையும் பயன்படுத்தி இன்று அல்லது நாளைக்குள் (திங்கட்கிழமை) அந்நகரை கைப்பற்ற முயற்சி செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று கவர்னர் செர்கி கூறியுள்ளார்.

இந்நிலையில், ஸ்லோவியான்ஸ்க் நகர் மீது புதிய தாக்குதலை நடத்த ரஷிய படைகள் தயாராகி வருகின்றன என உக்ரைன் ராணுவம் தெரிவித்து உள்ளது.

Update: 2022-06-12 07:56 GMT

Linked news