நடிகர் ரவி மோகனின் 34-வது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு!

கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் 'ஆர்.எம் 34' படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.;

Update:2025-01-28 14:26 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இதையடுத்து, வெளியான இறைவன், சைரன், காதலிக்க நேரமில்லை படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. இவர் தற்பொழுது ஜீனி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ரவி மோகனின் 34-வது 'ஆர்.எம் 34' படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குவதாகவும் அறிவிப்பு வெளியானது. சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைப்பதாக தகவல் வெளியானது. நடிகர்கள் சக்தி, காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார்.

இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிரபல இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்ற உள்ளார் என்றும் அப்டேட் வெளிவந்துள்ளது. இப்படம் வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளது.

ஏற்கனவே 'ஜெ.ஆர் 34' என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு தற்போது 'ஆர்.எம் 34' என்று தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'ஆர்.எம் 34' படத்தின் டைட்டில் டீசர் நாளை காலை 11 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் ரவி மோகனுடன் இணையும் 3-வது படம் 'ஆர்.எம் 34' என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்