'இது எங்கள் உடல்...' - வைரலாகும் ’புஷ்பா’ பட நடிகையின் பதிவு
புஷ்பா பட நடிகை அனசுயா, நடிகருக்கு எதிராக கருத்தை தெரிவித்துள்ளார்.;
சென்னை,
டோலிவுட் நடிகர் சிவாஜி, கதாநாயகிகளின் உடை குறித்து கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில், அவர் நடித்த தண்டோரா படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றார். அதில் அவர், பெண்கள் கண்டபடி உடைகள் அணிந்தால், பிரச்சினையை சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் உங்கள் அழகு முழுதாக மூடும் சேலையில்தான் உள்ளதே தவிர, அங்கங்கள் தெரியும்படி அணியும் உடைகளில் இல்லை என்றும் கூறினார். இந்த பேச்சுக்கு இப்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாடகி சின்மயி ஏற்கனவே சமூக ஊடகங்களில் சிவாஜிக்கு எதிராக தனது கருத்தை தெரிவித்திருந்தார். இப்போது புஷ்பா பட நடிகையும், தொகுப்பாளினியுமான அனசுயாவும் சிவாஜிக்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இது எங்கள் உடல்.. உங்களுடையது அல்ல' என்றும் மற்றொரு பதிவில் ஒரு பெண்ணின் ஆடை என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம், அனசுயாவின் கருத்துகளும் வைரலாகி வருகின்றன. சமூக ஊடக தளங்களில் சிவாஜிக்கு எதிராக எதிர்மறையான கருத்துகளும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சர்ச்சை இத்துடன் முடிவடைகிறதா அல்லது சிவாஜி பதிலளிப்பாரா என்பதைப் பார்க்க வேண்டும்.