'ராஜபீமா' திரைப்பட விமர்சனம்

நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ் நடித்துள்ள 'ராஜபீமா' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-02-01 10:50 IST

சென்னை,

இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் மோகன் தயாரிக்க, இசையமைப்பாளர் சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஓவியா ,ஆஷிமா நர்வால், நாசர், யாஷிகா ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ஜெயக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், 'ராஜபீமா' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சிறுவயதில் இருந்தே தன்னிடம் பிரியமாக இருக்கும் பீமா என்ற யானை மீது அன்பு செலுத்தி வீட்டில் வைத்து வளர்க்கிறான் ராஜா. யானைகளை கொன்று தந்தம் கடத்துபவர்களை போலீசிலும் பிடித்து கொடுக்கிறான். இதனால் கடத்தல் கும்பல் தலைவன் வெறியாகி ராஜாவை பழி தீர்க்க அலைகிறான். ராஜாவின் பீமா யானைக்கு மதம் பிடித்து விட்டதாக அதிகாரிகள் புத்துணர்வு முகாமுக்கு அழைத்து செல்கிறார்கள்.

யானையை மீட்க ராஜா முயற்சிக்கும்போது அது கடத்தப்படுகிறது. பீமாவை கடத்தியது யார்? எதற்காக கடத்தப்பட்டது?. அதை ராஜாவால் கண்டுபிடித்து மீட்க முடிந்ததா? என்பது மீதி கதை. 

ராஜாவாக வரும் ஆரவ் அதிரடி நாயகன் அம்சங்களோடு ஸ்கோர் செய்கிறார். யானை மீதான பாசத்தில் நெகிழ வைக்கிறார். அதை காணாமல் பதறி உருக வைக்கிறார். சண்டையில் வேகம். நாயகியாக வரும் ஆஷிகா நெர்வால் வசீகரிக்கும் அழகோடு காதலை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி உள்ளார்.

ஓவியா ஒரு காட்சியில் கவர்ச்சியாக ஆடிவிட்டு போகிறார். ஜோதிடத்தை நம்பும் மந்திரியாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு புறம் நேர்மையாகவும், இன்னொரு புறம் வில்லத்தனத்திலும் மிரள வைக்கிறார். யோகிபாபு காமெடி ஏரியாவை கலகலப்பாக நகர்த்துகிறார். யாஷிகா ஆனந்த் கவர்ச்சியையும், நடிப்பையும் சேர்த்து கொடுத்து கவனிக்க வைக்கிறார்.

நாசர், அருவி மதன், சாயாஷி ஷிண்டே, ஜெயக்குமார், கராத்தே வெங்கடேஷ் ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு. திரைக்கதையை இன்னும் வலுவாக்கி இருக்கலாம். சைமன் கே.சிங் இசையில் பாடல்கள் மனதில் நிற்கின்றன. பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு உதவி உள்ளது. சதீஷ்குமார் ஒளிப்பதிவு சிறப்பு. மனிதனுக்கும், யானைக்கும் உள்ள பாசப் பிணைப்பை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லி உள்ளார் இயக்குனர் நரேஷ் சம்பத்.

 

Tags:    

மேலும் செய்திகள்