கூல் சுரேஷ் ரசிகர்களால் நிறுத்தப்பட்ட “ரஜினி கேங்” படப்பிடிப்பு - ரஜினி கிஷன்
ரமேஷ் பாரதி இயக்கத்தில் ரஜினி கிஷன் நடித்துள்ள “ரஜினி கேங்” டிரெய்லர் வெளியானது.;
சென்னை,
‘பிஸ்தா’ திரைப்படம், ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ போன்ற வெப் தொடர்களை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம், ‘ரஜினி கேங்’.
ரஜினி கிஷன் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ளார். திவிகா, முனீஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், கல்கி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை எம்.ரமேஷ்பாரதி இயக்கியுள்ளார். இப்படத்தை மிஷ்ரி என்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
‘ரஜினி கேங்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில், ரஜினி கிஷன் பேசியதாவது, “ரஜினி கேங் எனது மூன்றாவது படம். ஏற்கனவே இரண்டு படம் செய்துவிட்டேன். மக்கள் மனதில் பெரிய ஹீரோவாக இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் என் கனவு. அதற்காகத் தான் கதை கேட்டேன். ரமேஷ் பாரதி சார் மூன்று கதை சொன்னார், அவரே இந்தக்கதை செய்யுங்கள், காமெடி மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். முதலில் நாமே தயாரித்தும், நடிக்கவும் வேண்டுமா? என யோசித்தேன், பிறகு நாமே தயாரித்து விடலாம் என முடிவு செய்து படத்தை ஆரம்பித்து விட்டோம்.
படத்தில் எல்லா பெரிய நடிகர்களையும் கமிட் செய்துவிட்டோம், ஆனால் எனக்கு ஹீரோயின் மட்டும் செட்டாகவில்லை. பலரை அணுகினோம் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை, இறுதியாக தான் திவிகா வந்தார். முனீஷ்காந்த் என் நடிப்பைப் பாராட்டினார். ஷீட்டிங் போது கூல் சுரேஷ் வந்தார் அவருக்காக ரசிகர்கள் குவிந்து விட்டார்கள். 3 மணி நேரம் படப்பிடிப்பை நிறுத்திவிட்டோம் அவருக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்” என்றார்.
“ரஜினி கேங்’ படத்தின் டிரெய்லரை விஷ்ணு விஷால் வெளியிட்டார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.