எனக்கு சவால் விடும் படங்கள் இன்னும் வரவில்லை - தோட்டா தரணி
பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருது பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு வழங்கப்பட்டுள்ளது.;
சென்னை,
இந்திய அளவில் தடம் பதித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார். தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது. முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்தியளவில் சத்யஜித் ரே, அமிதாப்பச்சன், ஷாருக்கான் ஆகியோர் வாங்கியுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
நேற்று சென்னை அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் கையால் அவ்விருதினை பெற்றுக்கொண்டார் அதே வளாகத்தில் கடந்த சில நாள்களாக ‘எனது சினிமா குறிப்புகளில் இருந்து’ என்ற தலைப்பிலான தோட்டா தரணியின் ஓவிய கண்காட்சியும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
விருது பெற்ற பிறகு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “இந்த விருதை ஒரே ஒரு படத்திற்காக கிடைத்ததாக நினைக்கவில்லை. எல்லா டைரக்டர்களுமே என்னை என்கரேஜ் செய்தார்கள். அதே போல் எனக்கு அமைந்த டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் எனக்கு ஏதுவாக இருந்தார்கள்” என்றார். பின்பு அவரிடம் நீங்கள் பணியாற்றியதிலே மிகவும் சவாலான படம் எந்த படம் எனக் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு சவால் விடும் படங்கள் இன்னும் வரவில்லை” என்றார்.
தொடர்ந்து அவரது ஓவிய கண் காட்சி தொடர்பான கேள்விக்கு, “இந்த கண்காட்சியை பிலிம் தீமில் அமைத்திருக்கிறேன். சிறுவயதில் நான் என் அப்பாவோடு இருந்த நினைவுகளை வைத்து உருவாக்கி இருக்கிறேன். இதை சினிமா துறையில் தரை துடைப்பவர்கள் முதல் டாப் மோஸ்ட் டைரக்டர்கள் வரை அனைவருkகும் அர்ப்பணிக்கிறேன்” என்றார்.