கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு காட்சி
தபசு மண்டபத்தில் ஒப்பனை அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி முகலிங்கநாதர் வடிவமாக காட்சி கொடுத்தார்.;
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலின் துணை கோவிலான கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்தது. 11-ம் திருநாள் மாலையில் தேரோட்டம் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆவணி தபசு காட்சி 13-ம் திருநாளான நேற்று நடந்தது. காலையில் சுவாமி-அம்பாள், முகலிங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மதியம் ஒப்பனை அம்பாள் தெற்கு ரதவீதி தபசு மண்டபத்தில் எழுந்தருளினார்.
மாலையில் ஒப்பனை அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி முகலிங்கநாதர் வடிவமாக காட்சி கொடுத்தார். பின்னர் சுவாமியை அம்பாள் சுற்றி வந்தபிறகு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்ததை திரளான பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர். இரவில் ஒப்பனை அம்பாளுக்கு யானை வாகனத்தில் பால்வண்ணநாதர் சுவாமி காட்சி கொடுத்தார்.
விழாவின் நிறைவு நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் சப்தாவர்ணம் சப்பரம் ரத வீதி உலா நடைபெறுகிறது. விழாவையொட்டி சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்குட்டுவேலவன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.