இபிஎப் சந்தாதாரர்களுக்கு குட் நியூஸ்: மாதாந்திர ஓய்வூதிய தொகை உயர்கிறது?
ரூ.1,000- த்தில் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து இபிஎப்ஓ அமைப்பு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.;
தனியார் துறையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம் தோறும் பிஎப் கணக்கிற்கு 12 சதவீத தொகை கழிக்கப்படுகின்றது. நிறுவனமும் அதே அளவு தொகையை ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறது. இதில் ஒரு பகுதி பிஎப் கணக்கிற்கும், ஒரு பங்கு இபிஎஸ் கணக்கிற்கும் செல்கிறது.
பிஎப் உறுப்பினர்கள் பணி ஓய்வுக்கு பிறகு ஒரு பெரிய நிதியை பெறுகிறார்கள். மேலும் இபிஎஸ் மூலம் மாதா மாதம் ஓய்வூதியமும் கிடைக்கின்றது. ஓய்வூதியதாரர்கள் மாதந்தோறும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1000 பெறுகிறார்கள். இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்பது குறித்து நீண்டகாலமாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில், இபிஎஸ் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை தற்போதைய ரூ.1,000- த்தில் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து இபிஎப்ஓ அமைப்பு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் பெங்களூரூவில் நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.