'கோமா' நிலையில் 1 வயது பெண் குழந்தை
புதுவையில் தவறான சிகிச்சையால் 1 வயது பெண் குழந்தை ‘கோமா’ நிலைக்கு சென்றதாக கூறி ஜிப்மர் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
புதுச்சேரி
தவறான சிகிச்சையால் 1 வயது பெண் குழந்தை 'கோமா' நிலைக்கு சென்றதாக கூறி ஜிப்மர் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 வயது பெண் குழந்தை
வில்லியனூரை அடுத்த நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகு. இந்திய ஜனநாயக கட்சி புதுச்சேரி மாநில இளைஞர் அணி செயலாளர். அவரது 1 வயது பெண் குழந்தை சாஷிகாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திடீரென அந்த குழந்தை 'கோமா' நிலைக்கு சென்றதாக தெரிகிறது. குழந்தையின் உடல் நிலை குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேட்டதற்கு டாக்டர்கள் சரிவர பதில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
திடீர் முற்றுகை
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதற்கு முன் ஏதோ மருந்து கொடுக்கப்பட்ட பிறகு தான் குழந்தை கோமாவிற்கு சென்றது. எனவே தவறான சிகிச்சை அளித்ததே காரணமாக இருக்க வேண்டும் என்பதால் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதை வலியுறுத்தி ஜிப்மர் மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டு இன்று மதியம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் ஜிப்மர் மருத்துவமனை முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
25 பேர் கைது
இதுபற்றி அறிந்த கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் 5 பெண்கள் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். இதன்பின் அங்கு போக்குவரத்து சீரானது. இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.