புதிதாக கட்டப்பட்ட படகு எரிந்து நாசம்

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில், புதிதாக கட்டப்பட்ட படகு இன்று மாலை திடீரென்று எரிந்து நாசமானது.

Update: 2023-07-22 18:12 GMT

நிரவி

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில், புதிதாக கட்டப்பட்ட படகு நேற்று மாலை திடீரென்று எரிந்து நாசமானது.

புதிய படகு கட்டும் பணி

காரைக்காலை அடுத்த மண்டபத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு. இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில், புதிதாக படகு கட்டும் இடத்தில் புதிய படகு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதில் படகுக்கு முக்கிய பகுதியான மோல்டு செய்யப்பட்டு படகு கூட்டில் பொறுத்தப்படுவதற்காக வைக்கப்பட்டு இருந்தது.

தீப்பிடித்து எரிந்தது

இந்நிலையில் இன்று மாலை படகு கட்டும் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியதை மீன்பிடித்துறை முகத்தில் இருந்த மீனவர்கள் கண்டனர். பின்னர் அங்கு சென்று பார்த்த போது, படகு கட்டுமான பகுதியில் தென்னரசுக்கு சொந்தமான படகின் மோல்ட் எரிந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காரைக்கால் மாவட்ட தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் படகின் மோல்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பக்கத்தில் இருந்த கருவை காட்டில் பற்றிய தீயானது கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி அதையும் அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள படகு எரிந்து நாசமானதை கேள்விப்பட்டு படகின் உரிமையாளர் தென்னரசு மயக்கமடைந்து விழுந்தார். பின்னர் சக மீனவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். தீ விபத்து குறித்து நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்