வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.புதுவையில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
புதுச்சேரி
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.புதுவையில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்க சங்கிலி பறிப்பு
புதுச்சேரி முதலியார்பேட்டை முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 60). வில்லியனூரில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருடன் இவரது தாயார் அமிர்தம் (85) வசித்து வருகிறார். சங்கர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவை காண சென்றார். அப்போது அமிர்தம் மற்றும் வீட்டில் தனியாக இருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர் இரவு நேரத்தில் அவரது வீட்டின் உள்ளே புகுந்து, அமிர்தத்தின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்க சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த 3 கிராம் மோதிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இந்த நிலையில் கோவிலுக்கு சென்று சங்கர் நள்ளிரவு வீட்டிற்கு திரும்பினார். அப்போது அதிர்ச்சியில் இருந்த அமிர்தம் இது குறித்து தனது மகனிடம் தெரிவித்தார். அவர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
வலைவீச்சு
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமிர்தத்திடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர் யார் என விசாரித்து வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுவையில் தொடர்ந்து ஆங்காங்கே வழிப்பறி மற்றும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன.ஆனால் குற்றவாளிகள் யாரும் இதுவரை
சிக்கவில்லை. ஆங்காங்கே கஞ்சா விற்பனையும் நடக்கிறது. எனவே போலீஸ் உயர்அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி முனைப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.