புதுச்சேரி சட்டசபை மார்ச் 9-ந்தேதி கூடுகிறது

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 9-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.;

Update:2023-02-22 22:48 IST

புதுச்சேரி

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 9-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட்

புதுவையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்புவரை மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன்பின்பு அந்த நடைமுறை மாறியது.

மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்பின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதல் மார்ச் மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்து வந்தார்.

ரூ.11,600 கோடி பட்ஜெட்

இதன்படி கடந்த மாதம் மாநில திட்டக்குழு கூட்டம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கூட்டப்பட்டு 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தொகையாக ரூ.11 ஆயிரத்து 600 கோடியை நிர்ணயம் செய்தது. இது குறித்த கோப்பு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் கடந்த 3-ந்தேதி புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டம் நடந்தது. இந்தநிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை மார்ச் மாதம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான கோப்பு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

சட்டசபை கூடுகிறது

அந்த கோப்புக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (மார்ச்) 9-ந்தேதி புதுவை சட்டசபை கூடுகிறது.

இது பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் அன்றைய தினம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுகிறார். மார்ச் 10-ந்தேதி நிதி அமைச்சர் பொறுப்பினை வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தொடர் மார்ச் மாதம் முழுவதும் நடைபெற வாய்ப்பு உள்ளது.

இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது தொடர்பாக கூட்டத்தொடர் தொடங்கியதும் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.

Tags:    

மேலும் செய்திகள்