சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும்
சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும் என மத்திய மந்திரியிடம் சபாநாயகர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.;
புதுடெல்லி
புதுச்சேரி சபாநாயகர் செல்வம் டெல்லி சென்றுள்ளார். அவர் ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான ஏனாம் ஆந்திர மாநில பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் நேரடியாக புதுச்சேரிக்கு வர பொது போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடா வரை செல்லும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையானது செங்கல்பட்டு வரை மட்டுமே உள்ளதால் ஏனாம் பகுதி மக்கள் அங்கிருந்து புதுச்சேரி வர சுமார் 120 கிலோ மீட்டர் பஸ்சில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே ஏனாம் பகுதி மக்களின் வசதிக்காக சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட மத்திய மந்திரி, இது தொடர்பாக உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.