கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு

கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

Update: 2023-08-10 17:53 GMT

புதுச்சேரி

கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

பட்டமளிப்பு விழா

புதுவை ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 24-வது பட்டமளிப்பு விழா புதுவை கம்பன் கலையரங்கத்தில் இன்று நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் செழியன் வரவேற்றார்.

விழாவில் 59 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், 6 பேருக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் மாணவர்கள் பட்டம் பெறும் நாள். முன்பு சிலரது வீடுகளில் பட்டங்கள் வாங்குவது போன்ற படங்கள் இருக்கும். அதை கிராமப்புறங்களில் பெருமையாக வைத்திருப்பார்கள். அப்போது கிராமங்களில் பட்டம் பெறுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கல்லூரியில் படிக்க சென்னை, திருச்சிக்கு செல்ல வேண்டும். இப்போது அனைவருக்கும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

காமராஜர் எல்லோருக்கும் கல்வி கிடைக்கும் விதமாக மாற்றங்களை கொண்டு வந்தார். மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையான வசதிகளை ஏற்படுத்தி தந்தார். சிறந்த கல்வியாளர்களை உருவாக்க அரசு முயற்சி எடுக்கிறது.

100 சதவீத கல்வியறிவு

மருத்துவக்கல்லூரி தொடங்குவது என்பது சாதாரணமானது அல்ல. அதிக நிதி தேவைப்படும். புதுவையில் பள்ளி படிப்பை முடித்த அனைவரும் கல்லூரி படிப்பை தொடர தேவையான வசதி உள்ளது. ஏதாவது ஒரு கல்லூரியில் அவர்களுக்கு இடம் கிடைத்துவிடுகிறது.

மக்கள் தொகைக்கு ஏற்ப கல்லூரிகளை தொடங்க மத்திய அரசும் அக்கறையாக உள்ளது. மாநில அரசுகளும் அதிக நிதியை ஒதுக்கி நல்ல கல்வியை தருகிறது. இந்த விழாவில் அதிக அளவில் பெண்கள் பட்டம் பெற்றுள்ளனர். புதுவை 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. பள்ளி படிப்பு மட்டுமல்லாது கல்லூரி படிப்பினையும் இலவசமாக தருகிறோம். ஆதிதிராவிட மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்தாலும் கல்வி கட்டணம் தருகிறோம்.

கல்விக்கட்டணம்

கல்வி கட்டணம் தருவதில் சிறிய குறை உள்ளது. அதாவது சென்டாக் மூலம் தனியார் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகங்கள் உடனடியாக கல்வி கட்டணத்தை கேட்கிறார்கள். அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்டாக் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.

இதற்கு முன்பு இது எப்படி இருந்ததோ தெரியாது. ஆனால் இப்போது நாங்கள் வழங்கிவிடுவோம். எனவே மாணவர்களிடம் கல்விக்கட்டணம் கேட்டு வற்புறுத்த வேண்டாம் என்று தனியார் கல்லூரி நிர்வாகங்களை கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பாக கல்லூரிகளுக்கு கடிதம் எழுத கூறியுள்ளேன்.

ரூ.10 ஆயிரமாக உயர்வு

உலகத்தரம் வாய்ந்ததாக நமது கால்நடை கல்லூரி உள்ளது. எங்கள் அரசு பொறுப்பேற்ற பின் ஊழியர்களுக்கான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வருகிறது. ஆராய்ச்சிகளை விரிவுபடுத்த தேவையான உதவிகளை அரசு செய்யும். இங்கு படிக்கும் மாணவர்கள் புதியவற்றை கண்டுபிடித்து புதுவைக்கு பெருமை சேர்க்கவேண்டும்.

கல்லூரிக்கு தேவையான மாணவர்கள் தங்கும் விடுதி, கருத்தரங்க கூடம் ஆகியவை கட்டித்தரப்படும். மாணவர்களுக்கான பயிற்சிக்கால கல்வி உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். காரைக்காலில் மண்டல மையம் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

சபாநாயகர் செல்வம்

சபாநாயகர் செல்வம் பேசும்போது, 'ரூ.10 ஆயிரம் கட்டணத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மருத்துவ படிப்பு கிடைக்க வழிவகை செய்துள்ளார். கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் குறைந்த செலவில் கால்நடை தீவனங்களை உருவாக்கி அதிக அளவில் பால் உற்பத்தி செய்ய வழிவகை காணவேண்டும்' என்றார்.

அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசுகையில், 'முதல்-அமைச்சர் தான் இந்த கல்லூரியை ஆரம்பித்தார். அவர் மாணவர்கள் தடையின்றி படிக்க கல்விக்கட்டணமும் தருகிறார். படித்து முடித்தவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்யவேண்டும். ஏழைகளின் தரம் உயர பாடுபட வேண்டும்' என்றார்.

சாய்.சரவணன்குமார்

அமைச்சர் சாய்.சரவணன்குமார் பேசும்போது, வாயில்லா ஜீவன்களுக்கு என்ன நோய் என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பாராட்டுக்குரியவர்கள். முடியாது என்று சொல்லாமல் சிறப்பான சேவையை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வேளாண்துறை செயலாளர் குமார், இத்தாலி டஸ்சிய பல்கலைக்கழக பேராசிரியர் நிக்கோலா லேசிடேரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்