மது குடிக்க பணம் கேட்டு பெற்றோரை தாக்கியவர் கைது
புதுச்சேரி கொசப்பாளையம் பகுதியில் மது குடிக்க பணம் கேட்டு பெற்றோரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;
புதுச்சேரி
புதுச்சேரி கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 48). பெயிண்டர். அவரது மனைவி சுமதி (38). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் சூர்யா (22) அடிக்கடி மது குடித்து விட்டு வந்து பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று இரவு சுப்ரமணி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த சூர்யா மது குடிப்பதற்கும், புதிய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கும் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா வீட்டில் இருந்த இரும்புக்கம்பியால் தந்தை என்றும் கூட பாராமல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தடுத்த சுமதியையும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தார்.