15 பவுன் நகை இருந்த கைப்பையை தவற விட்ட தம்பதி

புதுவை கடற்கரைக்கு வந்த போது 15 பவுன் நகைகள் இருந்த கைப்பையை தம்பதி தவறவிட்டனர். அதை எடுத்து போலீசில் ஒப்படைத்த பெண் துப்புரவு தொழிலாளி பாராட்டப்பட்டார்.

Update: 2022-05-22 17:43 GMT

புதுச்சேரி

புதுவை கடற்கரைக்கு வந்த போது 15 பவுன் நகைகள் இருந்த கைப்பையை தம்பதி தவறவிட்டனர். அதை எடுத்து போலீசில் ஒப்படைத்த பெண் துப்புரவு தொழிலாளி பாராட்டப்பட்டார்.

உறவினர் நிகழ்ச்சிக்கு வந்தனர்

தூத்துக்குடியை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 42. இவரது மனைவி சுஜாதா (35). இவர்கள் இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி வந்தனர்.

இங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த அவர்கள் காலை கடற்கரை சாலைக்கு சென்றனர். அங்கு காந்திசிலை அருகில் அமர்ந்திருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்திராகாந்தி சிலை அருகே சென்ற போது 15 பவுன் நகைகள் வைக்கப்பட்டு இருந்த கைப்பையை கடற்கரை சாலையிலேயே தவற விட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பதறியடித்துக் கொண்டு மீண்டும் கடற்கலை சாலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் வைத்துச் சென்ற கைப்பையை காணாமல் மேலும் திடுக்கிட்டனர்.

போலீசில் புகார்

இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளி ஜெயலட்சுமி என்பவர் தன்னிடம் அந்த கைப்பை இருப்பதாக கூறி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீசார் அந்த கைப்பையை அதன் உரிமையாளர் சுஜாதாவிடம் ஒப்படைத்தனர். 15 பவுன் நகைகள் இருந்த கைப்பையை ஒப்படைத்த துப்புரவு தொழிலாளி ஜெயலட்சுமியின் நேர்மையை பாராட்டி அவருக்கு போலீசார் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்