நோணாங்குப்பம் படகு குழாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை எதிரொலியால் நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

Update: 2023-10-24 17:53 GMT

அரியாங்குப்பம்

சுற்றுலா தலமான புதுவைக்கு வார இறுதிநாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்தநிலையில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை (ஆயுதபூஜை), செவ்வாய்க்கிழமை (விஜயதசமி) என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த தொடர் விடுமுறையால் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். இதனால் புதுவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

படகு சவாரி

புதுவை கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, படகு குழாம், மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றும் அலைமோதியதை காண முடிந்தது. இதனால் நகரின் முக்கிய சந்திப்புகளில் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை காண முடிந்தது.

நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் படகு சவாரி செய்வதற்காக கடந்த 4 நாட்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதன் காரணமாக படகு குழாம் திக்குமுக்காடியது. இதே நிலை இன்றும் நீடித்தது.

படகு குழாம் நுழைவு கட்டணம், படகு சவாரி செய்வதற்கு கட்டணம் பெறுவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். மேலும் படகில் பயணம் செய்ய நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால்கடுக்க நிற்கும் நிலை ஏற்பட்டது. இதேபோல் பாரடைஸ் பீச்சில் இருந்து திரும்புவதற்கும் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் நின்று இருந்ததை பார்க்க முடிந்தது.

ஆன்லைன் முன்பதிவு தேவை

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், நாங்கள் வெளியூர்களில் இருந்து புதுவையில் பல்வேறு இடங்களை ரசித்து பார்க்க வந்துள்ளோம். ஆனால் படகு சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருப்பதால், மற்ற இடங்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைகிறோம். இதை தவிர்க்கும் வகையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இதனால் வரிசையில் தேவையின்றி காத்திருக்கும் நேரத்தை தவிர்க்க முடியும். மேலும் நாங்கள் திட்டமிட்டபடி மற்ற இடங்களுக்கும் செல்ல முடியும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்