தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் உண்ணாவிரதம்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2023-08-31 16:30 GMT

காலாப்பட்டு

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

பதிவாளரை மாற்ற வேண்டும்

புதுவை காலாப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடியில் செயல்பட்டு வந்த அரசு பொறியியல் கல்லூரி கடந்த 2020-ம் ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பேராசிரியர்கள், ஊழியர்கள் என சுமார் 600 பேர் பணியாற்றுகின்றனர்.

தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றியபோதே ஆட்சிமன்ற குழு அமைக்கப்படாததால் பதிவாளராக நியமிக்கப்பட்ட சிவராஜ் காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை. மத்திய அரசு வழங்கிய ரூசோ நிதியை அவர் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பதிவாளரை மாற்றுமாறு பேராசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உண்ணாவிரதம்

இது சம்பந்தமாக புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் பல்கலைக்கழக வேந்தராக உள்ள கவர்னரிடம் துணைநிலை ஆளுநர் உள்ளிட்டவர்களிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் பதிவாளரை மாற்றம் செய்யக்கோரி பேராசிரியர்கள் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு அமர்ந்து இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் கல்பனா, துணை தலைவர் இளம் சேரலாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

200-க்கு மேல்...

தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு முழுநேர பதிவாளர் இல்லை. தற்பொழுது உள்ள பதிவாளர் அரைமணி நேரம் மட்டுமே பல்கலைக்கழகத்தில் உள்ளார். இதனால் காலியாக உள்ள 140 பேராசிரியர் பணியிடங்கள், 300 ஊழியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் தேசிய அளவில் 34-வது இடத்தில் இருந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தற்போது 200-க்கு மேல் வந்துவிட்டது.

3000 மாணவர்கள் படிக்கும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்ற குழு இல்லை. இதனை நியமிக்க வேண்டிய துணைநிலை ஆளுநரும் அரசும் வேடிக்கை பார்ப்பதாக பேராசியர் சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்