2 நாள் சிறப்பு முகாம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 6.20 லட்சம் பேர் விண்ணப்பம்

செங்கல்பட்டில் 36 ஆயிரத்து 847 மனுக்கள் பெறப்பட்டுஉள்ளன.;

Update:2026-01-07 02:21 IST

சென்னை,

தமிழகத்தில் தீவிர வாக்காளர் திருத்தப்பணி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 பேர் உள்ளனர். சுமார் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ளனர். இது தவிர கணக்கெடுப்பு படிவம் சரியாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் வரைவு பட்டியலில் விடுப்பட்டவர்கள் பெயர் சேர்க்க, முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு இதுவரை சுமார் 17 லட்சம் பேர் மனு கொடுத்து இருக்கின்றனர். அதில் சிறப்பு முகாம் நடந்த கடந்த 3 மற்றும் 4-ந்தேதிகளில் 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, கணக்கீட்டு கட்டத்தின்போது கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத பொதுமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம்-6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். இந்த பட்டியலில் ஆட்சேபணை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவை நீக்க கோரிக்கையாகச் சமர்ப்பிக்க படிவம்-7 மூலம் விண்ணப்பிக்கலாம். முகவரி மாற்றுதல் மற்றும் திருத்தம் செய்ய படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, கடந்த 3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாம்களின்போது மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 20 ஆயிரத்து 133 மனுக்கள் பெறப்பட்டன.அதன்படி சென்னையில் 27 ஆயிரத்து 359 மனுக்கள், திருவள்ளூரில் 26 ஆயிரத்து 720, காஞ்சிபுரத்தில் 24 ஆயிரத்து 776, செங்கல்பட்டில் 36 ஆயிரத்து 847 மனுக்கள் பெறப்பட்டுஉள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்