சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு - மத்திய அரசின் முடிவுக்கு ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பினரும் முன்னேற வேண்டும், அனைத்துத் தரப்பினருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அனைத்துத் தரப்பினரும் மேம்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்தியா முழுவதும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், தமிழ்நாட்டிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பினைப் பெற்றுத் தந்தவர் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவால் உறுதி செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் 01-03-2027 குறிப்புத் தேதியை (Reference Date) அடிப்படையாகக் கொண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்றும், இதற்கான அரசாணை 16-06-2025 அன்று வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதன்மூலம், சமுதாயத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் நிச்சயம் அதிகரிக்கும்.
சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பினை எடுக்க மாநில அரசு மறுத்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்ட மத்திய அரசுக்கும், பாரதப் பிரதமருக்கும் என்னுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.